Join THAMIZHKADAL WhatsApp Groups
காலை, மதியம், இரவு (பிரேக்ஃபாஸ்ட், லன்ச், டின்னர்) - தினசரி இந்த மூன்று வேளையும் தான் அனைவரும் சாப்பிடுகிறோம்.
அப்படிதானே? ஆனால் ஒருசிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என சாப்பிடாமல் இருப்பார்கள். ஒரு சிலருக்கோ சாப்பிடக் கூட நேரம் இருக்காது. எடை குறைக்க வேண்டும் என சாப்பிடாமல் இருப்பவர்கள் பற்றி பேச நிறைய இருக்கிறது. முக்கியமாக இது ஒருவரின் தனிப்பட்ட முடிவைப் பொறுத்தது. அதை இன்னொரு கட்டுரையில் விளக்கமாக பார்ப்போம். சாப்பிட நேரம் இருப்பதில்லை என்பதே நாம் பொதுவாக காணும் பிரச்சனை. இன்றைய அவசரகால உலகத்தில் பலரும் காலை - மதியம் - இரவு, இதில் ஏதாவது ஒரு நேரத்தில் சாப்பிடாமல் இருந்து விடுகிறார்கள். சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகப்போகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது நம் உடலில் பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் ஒழுங்காக சாப்பிடாவிட்டால் உங்கள் உடலில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
பசி காரணமாக அளவுக்கு அதிகமாக சாப்பிடுவீர்கள்: நீங்கள் ஒரு வேலை சாப்பிடாமல் இருந்தால் அடுத்த வேளை சாப்பிடும்போது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவீர்கள். உதாரணமாக காலையில் சாப்பிடவில்லை என்றாலோ அல்லது நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தாலோ, உங்கள் உடல் இழந்த சக்தியை மீட்க வழியை தேடும். இதன் காரணமாக உங்கள் உடலில் உள்ள செல்கள் அதிக உணவைக் கோரும். நீங்களும் நிறைய சாப்பிடுவீர்கள். முக்கியமாக, நீங்கள் பசியாக இருக்கும் போது எந்த உணவையும் - ஆரோக்கியமற்றதாக இருந்தாலும் - சாப்பிடத் தொடங்குவீர்கள்.
உங்கள் மெடபாலிஸத்தின் அளவை பாதிக்கும்: தொடர்ச்சியாக சாப்பாட்டை தவிர்க்கும் போது, நீங்கள் பட்டினி இருக்கிறீர்கள் என உங்கள் உடல் தானாகவே நினைத்துக் கொள்ளும். ஆற்றலை சேமித்து வைக்கவே நம் உடல் இப்படி செய்கிறது. எனினும், காலை அல்லது இரவு உணவை தவிர்த்தால், உங்களின் ஒட்டுமொத்த மெட்டாபாலிஸம் பாதிக்கப்படும். இதன் காரணமாக உங்களின் உடல் எடை குறையத் தொடங்கும்.
கோபம், எரிச்சல் அடைவீர்கள்: நீங்கள் ஒரு வேளை சாப்பிடாமல் இருந்து பாருங்கள். உங்கள் மூளை உங்கள் சொல் பேச்சு கேட்காது. எதைப் பார்த்தாலும் எரிச்சலாகவும், கோபமாகவும் வரும். இதற்கு பசி தான் காரணம். நாம் பசியில் இருக்கும் போது நமது ஆற்றல் முழுவதையும் இழந்து, அறிவாற்றல் குறைந்து காணப்படுகிறோம். இதனால் உடல் அளவுக்கு அதிகமாக கார்டிஸோல் ஹார்மோனை சுரக்க ஆரம்பிக்கிறது. உங்களுக்கு கோபமும் எரிச்சலும் பதற்றமும் அதிகரிக்கிறது.
ஹார்மோன் மாற்றம்: ஒருவேளை உணவு சாப்பிடாமல் இருந்தால் கூட, நீங்கள் பட்டினி இருப்பதாக உணர்ந்து உங்கள் உடலில் உள்ள கர்டிஸோல் ஹார்மோனின் அளவு அதிகரிகிறது. கர்டிஸோல் அளவு உயர்வதால் உங்களின் எடை அதிகரிக்கிறது, நோய் தாக்கும் ஆபத்து அதிகரிக்கிறது, சர்க்கரை அளவு சீரற்றதாகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு: தொடர்ச்சியாக சாப்பிடுவதை தவிர்த்து வந்தால், நாட்கள் செல்ல செல்ல நீங்கள் வழக்கத்தை விட குறைவாக சாப்பிடும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இதன் காரணமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்தின் அளவும் குறையத் தொடங்கும். இதனால் பல்வேறு ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாவீர்கள்.
No comments:
Post a Comment