Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்றைய நிலையில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகவும் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.
தகவல் தொழில்நுட்பத்துறை முன்னர் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். மேலும் கல்லூரிகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த ஆண்டில் அதனை 40% குறைக்க உள்ளதாக மற்றொரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தகைய நெருக்கடியை சந்தித்து வருவதற்கு பொருளாதார நெருக்கடி மட்டுமின்றி இந்தியாவில் அதிகரித்துள்ள போட்டியும் முக்கிய காரணமாகும். மேலும் செலவை குறைக்கும் பொருட்டு சிறு நிறுவனங்கள் மட்டுமின்றி மிகப்பெரும் டெக் ஜாம்பவான்களான கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களும் பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மனதில் வைத்து டீம் லீஸ் டிஜிட்டல் நிறுவனமானது சமீபத்தில் புதிய சர்வே ஒன்றை எடுத்துள்ளது.
அதாவது 2023 - 2024 ஆம் நிதியாண்டில் கல்லூரிகள் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் விகிதமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதமாக குறைக்கப்படும் என தெரியவந்துள்ளது. அதாவது இந்த நிதி ஆண்டில் 1,55,000 எண்ணிக்கையிலான புதிய பணியாளர்கள் கல்லூரி வளாகங்களின் மூலம் இருந்து தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இதுவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கல்லூரி வளாகங்களின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,30,000 ஆகும்.
விப்ரோவின் மூத்த அதிகாரியான சவுரப் கோவில் கூறுகையில், விப்ரோ ஏற்கனவே யார் யாருக்கெல்லாம் பணியமர்த்தல் ஆணைகளை அளித்துள்ளதோ அவர்களில் பெரும்பாலானோரை இன்னமும் கூட பணியில் சேர்க்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும், அவர்களை பணியமர்த்துவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இந்த ஆண்டு கல்லூரிகளில் இருந்து புதிதாக தேர்வு செய்யப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சென்ற ஆண்டு இருந்த நிலைமையை போல் இந்த ஆண்டு இல்லை என்றும், தேவைக்கு முன்னதாகவே பணியாளர்களை பணியமர்த்தும் விகிதமானது தற்போது மிகவும் கவனமாக கையாளப்படுகிறது என்றும் பொருளாதாரம் நெருக்கடி போன்றவையும் கணக்கில் வைத்து மிகவும் எச்சரிக்கையாக இதை அணுக வேண்டியிருப்பதாகவும் சவுரப் கோவில் தெரிவித்துள்ளார்.
மேலும், விப்ரோ போன்ற பெரும் நிறுவனங்கள் ஏற்கனவே வெளியிட்ட பணியமர்த்தல் ஆணைகளை திரும்ப பெறவோ அல்லது திருத்தி அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முன்னர் இருந்த சம்பளத்தை விட குறைவான சம்பளத்திற்கு பணியாளர்களை பணியில் சேரும்படி அவர்கள் ஆணைகளை திருத்தி அளித்துள்ளார்கள். புதிதாக பணியில் சேரும் பணியாளர்களும் வேறு வழி இன்றி அவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இதைப் பற்றி பேசிய விப்ரோவின் தலைமை நிதி நிர்வாகியான ஜதின் தலால் கூறுகையில், கிட்டத்தட்ட 92 சதவீதத்திற்கும் அதிகமான புதிய பணியாளர்கள் குறைந்த சம்பளத்துடன் பணியில் சேர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். விப்ரோவின் அனைத்து நடவடிக்கைகளும் மிகவும் நேர்மையுடனும் வெளிப்படை தன்மையுடனும் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment