Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 21, 2023

ஆசிரியர் நியமன பிரச்னைக்கு முடிவு கட்டுங்க!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ( தினமலர் செய்தி )

தமிழகத்தில், 670 மேல்நிலை, 435 உயர்நிலை, 1,003 நடுநிலை மற்றும் 1,235 துவக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல், புள்ளி விபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே, அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப, ஆசிரியர்கள் இல்லாமல் பற்றாக்குறை உள்ள சூழலில், தலைமை ஆசிரியர்களும் கணிசமான அளவில் இல்லை என்பது கவலை தரும் விஷயம்.

தற்போதைய நிலையில் அரசு பள்ளிகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்கள் பணி சம்பந்தப்பட்ட சில வழக்குகள் நீதிமன்றங்களில் தீர்வுக்காக காத்திருக்கின்றன. அதனால், இந்த வழக்குகளை காரணம் காட்டியே, தமிழக அரசு தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு குறைந்த ஊதியத்தை கொடுத்து ஏமாற்றி வருகிறது.

அரசியல் கட்சிகள் தங்களுக்கு பாதிப்பு என்றால், நீதிமன்றங்களில் விடுமுறை நாட்களில் கூட வழக்குகள் தொடுத்து, தங்களுக்கு தேவையான பரிகாரத்தை பெறுகின்றன. அதேநேரத்தில், எதிர்கால சிற்பிகளை உருவாக்கும் ஆசிரியர்கள் பணி நியமன வழக்குகளில் மட்டும் அலட்சியம் காட்டுகின்றன.

'டாஸ்மாக்' மதுக் கடைகள் தொடர்பாக, ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டால், அதை எவ்வளவு விரைவாக நடத்தி, தங்களுக்கு சாதகமான தீர்ப்பு பெற முடியுமோ, அதை தமிழக அரசு செய்கிறது. இதற்காக மேற்கொள்ளும் முயற்சியில், 1 சதவீதம் கூட ஆசிரியர்கள் பணி நியமனம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவாக முடிப்பதில் அக்கறை காட்டுவதில்லை.

தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசுக்கு, உச்ச நீதிமன்றம் வரை வழக்குகளை நடத்த, நல்ல சீனியர் வழக்கறிஞர்கள் அவர்கள் கட்சியிலேயே உள்ளனர். அவர்கள் வாயிலாக, உயர் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான பல்வேறு வழக்குகளை, விரைவில் விசாரணைக்கு கொண்டு வந்து முடிக்கலாம்; ஆனால், அதைச் செய்ய தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.

ஒரு சிலர் தாக்கல் செய்த வழக்குகளுக்காக, ஒட்டுமொத்த ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பாமல் இருப்பது சரியல்ல. எனவே, இனியாவது இந்த விஷயத்தில் தமிழக அரசு தீவிர அக்கறை காட்ட வேண்டும். வழக்குகளை விரைவாக முடித்து, அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் தான், பொதுத் தேர்வுகளில் அரசு பள்ளிகள் சாதிக்க முடியும்; அதன் வாயிலாக, மாணவர்கள் எண்ணிக்கையும் உயரும். இல்லையெனில், அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சலுகைகள் வழங்கினாலும் பலனிருக்காது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News