Join THAMIZHKADAL WhatsApp Groups
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பாக பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதற்கும் பொது கவுன்சிலிங் உள்ளிட்ட இந்த மாற்றங்கள் அடுத்தாண்டில் இருந்து அமலுக்கு வர உள்ளன.
மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, 'நீட்' எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவு, கடந்த 13ம் தேதி வெளியானது.
மாணவர் சேர்க்கைஇந்நிலையில், மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பாக, என்.எம்.சி., எனப்படும் தேசிய மருத்துவக் கமிஷன், கடந்த 2ம் தேதி புதிய விதிமுறைகளை வெளியிட்டது.
இந்த நடைமுறைகள் அனைத்தும், அடுத்த கல்வியாண்டில் இருந்து அறிமுகம் செய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி பல நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் முக்கிய அம்சங்கள்:மாணவர் சேர்க்கைக்கான 'மெரிட் லிஸ்ட்' எனப்படும் தகுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதன்படி தான், முதலிடங்களில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவக் கல்லுாரிக்கான இடம் ஒதுக்கப்படும்.தற்போதுள்ள நடைமுறையின்படி, நீட் நுழைவுத் தேர்வில், ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சமமான மதிப்பெண் பெற்றிருந்தால், உயிரியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை முடிவு செய்யப்படும். இதிலும் சமநிலையில் இருந்தால், அடுத்ததாக வேதியியல், அதற்கடுத்ததாக இயற்பியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் இறுதி செய்யப்படும்.
ஒருவேளை, ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், இதன்பிறகும் சமநிலையில் இருந்தால், வயதில் மூத்தவர்கள் அடிப்படையில் மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பெறுவர்.இந்த நடைமுறை மாற்றப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு முதல், முதலில் இயற்பியல், அதற்கடுத்து, வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.
இதன்பிறகும், சமநிலையில் இருந்தால், கம்ப்யூட்டர் வாயிலாக, குலுக்கல் நடத்தப்பட்டு, மாணவர்கள் தரவரிசை பட்டியல் தயாராகும். இதில், மனிதத் தலையீடு சிறிதும் இருக்காது.
வாய்ப்புமருத்துவக் கல்வி தொடர்பாக மற்றொரு புதிய மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேருவதற்கு, ஒருவருக்கு நான்கு முறை மட்டுமே வாய்ப்பு தரப்படும். அதுபோல மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்கள், ஒன்பது ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க வேண்டும்.
கட்டாய மருத்துவப் பயிற்சியின் கீழ், பயிற்சி எடுக்காமல், எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பை முடித்ததாக கருதப்படாது.இதைத் தவிர, நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பொது கவுன்சிலிங் முறையும் அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். இதன்படி, அந்தந்த மாநிலங்களுக்கான இட ஒதுக்கீடுகள், உள் ஒதுக்கீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இந்த பொது கவுன்சிலிங் நடைபெறும். தேவைக்கு ஏற்ப, பல சுற்றுகளாக இது நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment