10 வயது நிரம்பியவர்களுக்கு ஆதார் அட்டையை புதுப்பித்தல் கட்டாயம் என்று கடந்த மார்ச் 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது,அதோடு ஜூன் 14 வரை இது இலவசம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இந்தக் காலக்கெடு செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உங்கள் முகவரி, பெயர் மற்றும் ஆதாரின் பிற விவரங்களை காலக்கெடுவிற்கு முன்பு புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), உங்கள் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் கடைசி தேதியை செப்டம்பர் 14 வரை, அதாவது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
உங்களின் அடையாளத்தை சரிபார்க்க உதவுவதால், ஆதாரை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று UIDAI கூறியது. "மக்கள்தொகை தகவல்களின் துல்லியத்தன்மைக்கும் ஆதாரை புதுப்பிப்பது அவசியம். அதைப் புதுப்பிக்க அடையாளம் மற்றும் முகவரிச் சான்றுகளைப் பதிவேற்றவும்" எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கமாக, ஆதாரை புதுப்பிக்க ரூ. 50 செலவாகும், ஆனால் அது செப்டம்பர் 14-ம் தேதிக்கு முன்பு அதிகாரப்பூர்வ போர்ட்டலில் புதுப்பிக்கப்பட்டால் இலவசம். ஆதார் வைத்திருப்பவர்கள் https://myaadhaar.uidai.gov.in/portal என்ற இணையதளத்தில் இலவசமாக தங்கள் கார்டுகளைப் புதுப்பிக்கலாம். உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும்.
உங்கள் ஆதார் விவரங்கள் 7 வேலை நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும். ஆதாரை புதுப்பிக்க, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு அல்லது வேறு ஏதேனும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணம் போன்ற அடையாளத்தை நிரூபிக்கக் கூடிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரிக்கான ஆதாரத்தை வழங்க, தற்போதைய முகவரியைக் காட்டும் வங்கி அறிக்கை, யுடிலிட்டி பில் அல்லது வேறு ஏதேனும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் ஆதார் அட்டை விவரங்களைப் புதுப்பிக்க, இதனைப் பின்பற்றவும்.
UIDAI இணையதளத்திற்கு செல்லவும்.
"ஆதாரைப் புதுப்பிக்கவும்" என்ற பொத்தானைத் தட்டவும்.
உங்கள் ஆதார் எண்ணையும் OTP-யையும் உள்ளிடவும்.
புதுப்பிக்க வேண்டிய தகவலைத் தேர்ந்தெடுக்கவும்.
தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
தேவையான செயலாக்கக் கட்டணங்களைச் செலுத்தவும்.
பின்னர், "சமர்ப்பி" பொத்தானை அழுத்தவும்.
நீங்கள் சேவை கோரிக்கை எண்ணை (SRN) பதிவு செய்து கொள்ளலாம், இதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் கண்காணிக்க முடியும்.
No comments:
Post a Comment