Join THAMIZHKADAL WhatsApp Groups
தங்கள் உடலில் கூடுதலாக இருக்கும் எடையை குறைக்க பலரும் டயட் மற்றும் உடற்பயிற்சி என மாறி மாறி முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், பலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் முடிவு கிடைப்பது கடினமாக இருக்கிறது. இதற்கு காரணம் எடை இழப்பு முயற்சியை ஒரு முழுமையான திட்டமாக அவர்கள் உருவாக்காதது தான். பொதுவாக எடை இழப்பு பயணம் என்பது ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு மற்றும் உடல் செயல்பாடு என இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நீங்கள் எடை குறைப்பு முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு உதவ கூடிய 5 வகையான தேநீர் குறித்து இங்கே பார்க்கலாம்.
கிரீன் டீ :
நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம், எடை மற்றும் நல்வாழ்வை சீராக்குவதில் கிரீன் டீ-யின் பங்கு பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்போம். கிரீன் டீ குடிப்பதால் நிகழும் தாக்கம் பற்றி பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் வளர்சிதை மாற்றம் மேம்படுகிறது. தவிர இப்பழக்கம் உடலில் இருக்கும் கலோரிகளை மிக திறம்பட எரிக்கிறது.
இலவங்கப்பட்டை டீ :
நாம் வழக்கமாக குடிக்கும் டீ-யில் இலவங்கப்பட்டை ஸ்டிக்கை சேர்ப்பது இந்த மூலிகை மசாலாவின் ஆரோக்கியமான பண்புகளை டீ-யில் சேர்க்கிறது. இலவங்கப்பட்டை நார்ச்சத்து நிறைந்தது மற்றும் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை ஊக்குவிக்கிறது. மேலும், இலவங்கப்பட்டை உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதாக கூறுகின்றனர் நிபுணர்கள். காலை மற்றும் மாலை என 2 வேளையும் இலவங்கப்பட்டை டீ குடிப்பது நம் உடலுக்கு தேவையான சிறந்த ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
பெப்பர்மின்ட் டீ :
கலோரி இல்லாத இந்த பெப்பர்மின்ட் டீ-யானது உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கிறது. நீங்கள் சாப்பிடுவதற்கு முன் ஏதாவது குடிக்க விரும்பினால், ஒரு கப் பெப்பர்மின்ட் டீ குடிக்கலாம். இது உங்களை புத்துணர்ச்சியாக்கும். பெப்பர்மின்ட்டானது பசியை கட்டுப்படுத்த மற்றும் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது.
கெமோமில் டீ :
தினமும் ஒருவர் ஒரு கப் சூடான கெமோமில் டீ குடிக்க பல சிறந்த காரணங்கள் இருக்கின்றன. இந்த டீ-யை குடிப்பதால் Bloating குறைகிறது மற்றும் நல்ல தூக்கத்தை கொடுக்கிறது. இந்த 2 காரணிகளுமே எடை குறைப்பிற்கு முக்கியமானவையாக இருக்கின்றன. தீவிரமாக முயற்சித்தாலும் உடல் எடையை குறைக்க முடியாமல் பலர் அவதிப்படுவதற்கு தூக்கமின்மை முக்கியமான காரணமாக இருக்கிறது. கெமோமில் பூக்களை காய வைத்து பின் தயாரிக்கப்படும் டீ, நம் நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளை அமைதியடைய செய்து சிறப்பான தூக்கத்தை பெற வழிவகுக்கிறது.
ஊலாங் டீ :
இந்த பாரம்பரிய சீன டீ-யானது Camellia Sinensis என்ற செடியின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த டீ பொதுவாக சீனா மற்றும் தைவானில் அதிகம் பருகப்படுகிறது. இந்த டீ-யை பருகுவது உடல் அதிக கலோரிகளை எரிக்க தூண்டுகிறது. 1 கிளாஸ் ஊலாங் டீ குடிப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கவலை அல்லது பதற்ற உணர்வு குறைத்து நிம்மதியான உறக்கத்தை தூண்டுகிறது. தவிர இந்த டீ உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைக்கும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment