Sunday, June 25, 2023

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் : வடிவமைப்பை மாற்ற கோரிக்கை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயக்குனரிடம் அளித்துள்ள மனு:பத்தாம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம், 2019 - 20ல் அறிமுகமானது. அப்போது, அனைத்து பாடங்களுக்கும், வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டு உள்ளது.

அறிவியல் பாடத்தின் வினாத்தாள் வடிவமைப்பால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெரிதும் குறைந்து வருகிறது.எனவே, மாணவர்கள் நலன் கருதி, தியரியில் குறைந்தபட்சம், 20 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி என்ற முறையை நீக்க வேண்டும். 2 மதிப்பெண்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 7 மதிப்பெண் வினாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒரு கேள்வியை தவற விட்டாலும், மாணவர்களுக்கு, 7 மதிப்பெண் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, 2 மதிப்பெண்கள் கேள்வியை அதிகரித்து, 7 மதிப்பெண்களுக்கு பதிலாக, 5 மதிப்பெண்கள் வினாக்களை இடம் பெறச் செய்ய வேண்டும். பழைய வினாத்தாள் வடிவமைப்பு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறிவியல் வினாத்தாளில் அனைத்து பிரிவு வினாக்களிலும், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு சம எண்ணிக்கையிலான மதிப்பெண்கள் வழங்கி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும்.

மெல்ல கற்கும் மாணவர்கள், சராசரியாக பயிலும் மாணவர்கள், மீத்திறன் மாணவர்கள் அனைவரையும் உள்ளடக்கி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும். அனைத்து பாடங்களுக்கும், 10 மதிப்பெண்கள், அகமதிப்பீட்டு முறையில் வழங்கப்பட வேண்டும். இந்த மாற்றங்களை, இந்தக் கல்வியாண்டே அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News