Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 12, 2023

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை

பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது -

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் உள்ள காலிப் பணியிடங்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் ஆகியவற்றில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.12,000, ரூ.15,000, ரூ.18,000 என வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக வரும் ஆண்டுகளில் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை மாணவ, மாணவிகளின் கல்வி நலன்கருதி, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய பள்ளிக் கல்வி ஆணையருக்கு அதிகாரம் அளித்து ஆணை வழங்கப்படுகிறது என மற்றொரு அரசாணை கடந்த கல்வியாண்டில் வெளியிடப்பட்டது.

எனவே, இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால மற்றும் இறுதி தீர்ப்பாணைகளின் அடிப்படையில் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட செயல்முறைகள் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி நிகழ் கல்வியாண்டுக்கு (2023-24) பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர் உள்ள காலிப் பணியிடங்கள், மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் ஆகியவற்றில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக நியமனங்களை செய்ய அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நிகழ் கல்வியாண்டுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும்போது, கடந்த ஆண்டு (2022-23) மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டைவிட கூடுதலாக நியமனம் செய்யப்பட தேவை இருப்பின் எவ்வளவு தேவை என்பதை கடிதம் வாயிலாக தெரிவித்து, பின்னர் நியமனம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News