Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்று நம் வீட்டில் யாருக்காவது தலைவலி, வயிற்றுவலி, இருமல், சளி என்றால் உடனடியாக தெரு முனையில் இருக்கும் மெடிக்கல் ஷாப் நோக்கி ஓடுகிறோம்!
நம் முன்னோர்கள் வீட்டிற்குள்ளே மெடிக்கல் ஷாப்பினை வைத்திருந்தார்கள். அதன் பெயர் அஞ்சறைப் பெட்டி. வீட்டில் யாருக்காவது தலைவலி, வயிற்று வலி, காய்ச்சல், சளி என்றால், உடனே சமையலறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியிலிருந்து மருந்தை கொடுப்பார்கள். எந்த வித பக்க விளைவுகள் இன்றி நோயும் இரண்டே நாளில் குணமாகிடும்!
வாய்ப்புண் வந்தால், கசகசாவை மூன்று நாட்கள் மென்று சாப்பிட்டால், அது இருந்த இடம் தெரியாமல் போய்விடும்! அதேபோல் தலைவலி, வயிற்றுவலி, பேதி வந்தாலும் எங்க பாட்டி அந்த அஞ்சறைப் பெட்டியில் இருந்துதான் மருந்து எடுத்துத் தருவார்கள். அதில் வைக்கப்பட்டு இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், மஞ்சள், வசம்பு, கடுக்காய் போன்ற பொருட்களில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. அதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
*தனியா:பித்தம், உடல்சூட்டைக் குறைக்கும். ஜீரண சக்தியை கொடுக்கும். மென்று சாப்பிட்டால் நாவறட்சியும் போய் விடும். விக்கலை நிறுத்தும். தனியாவை கஷாயம் செய்து குடித்தால் வாந்தியை நிறுத்தி விடும்.
*மஞ்சள்:கிருமிநாசினி. கல்லீரலை பலப்படுத்தும். தோல் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்து. புற்றுநோயை கட்டுப்படுத்தும். வீக்கம் இருந்தால் மஞ்சளுடன், வெங்காயத்தை அரைத்து போட்டால் குறையும்.
*சீரகம்: இருமலை கட்டுப்படுத்தும். பித்தத்தைக் குறைக்கும்.
*கருஞ்சீரகம்:காய்ச்சல், தலைவலிக்கான மருந்து.
*வசம்பு:வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. அதனால் குழந்தைகளுக்கு இதை பெரியவர்கள் பயன்படுத்துவார்கள். இதை 'பிள்ளை வளர்ப்பான்', 'பேர் சொல்லாதது' என்றும் பெரியவர்கள் சொல்வதுண்டு. வசம்புடன் ஜாதிக்காய், மாசிக்காய் சேர்த்து உரைகல்லில் உரைத்துக் கைக் குழந்தைகளுக்கு நம் முன்னோர்கள் ஊட்டுவார்கள்.
*சுக்கு:ஜீரண கோளாறுகளை போக்கும். தலைவலிக்கும் சுக்கை அரைத்து பற்றுப் போடலாம்.
*திப்பிலி:வயிற்றில் உருவாகும் வாயு, உப்புசத்தைக் குறைக்கும். தலைவலியை போக்கும்.
*கண்டந்திப்பிலி:கண்டந்திப்பிலியில் ரசம் வைத்துக் குடித்தால், உடல் வலியை போக்கும். வரட்டு இருமலுக்கு நல்லது.
No comments:
Post a Comment