Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வியிலேயே கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வர வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் 2006-2011 வரை முதல்வராக இருந்த மு.கருணாநிதி சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
அப்போது 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்து, அதற்கான தனிப் புத்தகங்களும் அச்சிடப்பட்டன. ஆனால், அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில், கணினி அறிவியல் பாடத்தை கைவிட்டு, அறிவியல் புத்தகத்திலேயே கணினி அறிவியலுக்கு 3 பக்கங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே கணினி அறிவியல் விருப்ப பாடமாக உள்ளது.
அனைத்து துறைகளிலும் கணினியின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறும் இந்த காலக்கட்டத்தில், அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடத்தை தனிப் பாடமாக கொண்டு வர வேண்டும் என்கின்றனர் கணினி அறிவியல் பட்டதாரிகள்.
1-ம் வகுப்பு முதல்... இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வெ.குமரேசன் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்காக கடந்த திமுக ஆட்சியில் கணினி அறிவியல் தனிப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதைப் பார்த்து தான், கேரளாவில் 10-ம் வகுப்பில் கணினி அறிவியல் 6-வது பாடமாக சேர்க்கப்பட்டது.
வெ . குமரேசன்
ஆனால், 2011-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இப்பாடம் கைவிடப்பட்டது. எனவே, ஏழை, எளிய மாணவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவதுடன், கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்ற ஏறத்தாழ 60 ஆயிரம் பேருக்கு வேலையும் கிடைக்கும். இதற்கு தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாணவர் சேர்க்கை உயரும்: இதுகுறித்து கல்வியாளர் எஸ்.சிவகுமார் கூறியது: குழந்தைகள் சிறு வயதிலிருந்தே கணினி அறிவியல் பாடத்தை கற்றால் தான், அவர்கள் கல்லூரியில் அந்தத் துறையை தேர்வு செய்யும்போது, பெரிய அளவில் சாதிக்க வாய்ப்பு ஏற்படும். தொடக்க கல்வியிலேயே கணினி பாடத்தை அரசுப் பள்ளிகளில் நடத்த வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை நாங்கள் மாணவர் சேர்க்கைக்காக வீடுகள்தோறும் சென்ற போது பல பெற்றோர்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
எஸ்.சிவகுமார்
எனவே, இதை அரசு பரிசீலித்து கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளிகளில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் கணிசமாக உயரும் என்றார்.
தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்திய உழவர் சந்தை, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளித்து செயல்படுத்தி வருகிறார்.
மேலும், கருணாநிதியின் திட்டங்களை செயல்படுத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது. எனவே, இக்குழுவினர் இத்திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கணினி பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment