Join THAMIZHKADAL WhatsApp Groups
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி ஆரம்பம் முதலே கட்டாயம் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள்.
• ஆசிரியர்கள் அனைவரும் காலை இறை வணக்க கூட்டத்திற்கு முன்னதாகவே பள்ளிக்கு வருகை புரிதல் வேண்டும்.
• தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகைப்பதிவினை காலை வழிபாட்டு கூட்டத்திற்கு முன்னரே முடித்துவிட வேண்டும்.
* காலை இறை வணக்க கூட்டத்தில், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு நன்நெறி கருத்துகளை வழங்க வேண்டும்.
பள்ளியில் பயிலும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் "வகுப்பு மாணவர் தலைவர்" தேர்ந்தெடுத்திட வேண்டும்.
• பள்ளியளவில் ஆசிரியர் மாணவர் குழுக்கள் அமைத்து அதற்குரிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.
• பள்ளி துவங்கப்பட்ட முதல் நாளே பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்க பட்டதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் பணிகள் உடனடியாக பள்ளி பாட அட்டவணைப்படி துவங்கப்பட வேண்டும். வகுப்பு நேரங்களில் கற்றல் கற்பித்தலின் போது போதிக்கும் ஆசிரியர்கள் தங்கள் கைப்பேசியினை கட்டாயம் Silent Modeல் வைத்திருக்க வேண்டும்.
பள்ளிகளின் அனைத்து வகுப்பறைகளிலும் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் பயன்படுத்திட வேண்டும். கற்றல் கற்பித்தல் பணிகளின் போது ஆசிரியர்கள் கட்டாயம் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை பயன்படுத்திட வேண்டும்.
* ஆசிரியர்கள் வகுப்பறை கற்றல் கற்பித்தல் பணிகளின் போது வெள்ளை நிற சுண்ணக்கட்டிகளோடு வண்ணச் சுண்ணக்கட்டிகளையும் (Colour Chalk piece) பயன்படுத்திட வேண்டும்.
• பாட ஆசிரியர்கள் கற்றல் விளைவுகளை மையப்படுத்திய பாடக்குறிப்பேடுகளை (Notes of Lesson) வாரந்தோறும் தயாரித்து பயன்படுத்திட வேண்டும். பாட ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடுகள் தயாரித்திடும் போதே தகுந்த கருத்து வரைபடத்தினையும் (Concept map) இணைத்து தயாரித்திடல் வேண்டும்.
• மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு பாட இறுதியிலும் வழங்கப்பட்டுள்ள கருத்து வரைபடம் மற்றும் இணைய வளங்களை தொடர்ந்து பயன்படுத்திட வேண்டும்.
* Hitech Labகளில் பாடம் சார்ந்த இணையவழி காணொளி காட்சிகள் மாணவர்களுக்கு அவ்வப்போது காண்பிக்கப்பட வேண்டும்.
பாடக்குறிப்பேடுகளின் முதல் பக்கத்தில் ஆசிரியர்களின் சுய விவரங்கள், தேர்ச்சி சதவீதம் சார்ந்த விவரங்கள் மற்றும் சராசரி மதிப்பெண் குறித்த விவரங்கள் இடம்பெற வேண்டும்.
* பாடங்களை அவ்வப்போது நடத்தி முடிக்கும்போது வகுப்பில் மீத்திறன் மிக்க மாணவர்களை அழைத்து அனைத்து மாணவர்கள் முன்னிலையில் முடிக்கப்பட்ட பகுதிகளை தொகுத்து கூற செய்தல் வேண்டும். அதற்கேற்ப அனைத்து மாணவர்களையும் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
* ஆசிரியர்களின் பாடக்குறிப்பேடுகளில் பாடவேளைகளில் மாணவர் நிலை சார்ந்து கேட்கப்படவுள்ள LOT, MOT, HOT வகை வினாக்களும் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
வகுப்புகளில் கற்றல் கற்பித்தல் நடைபெறும் பொழுது புத்தகங்களில் முக்கியமான சொற்கள் மற்றும் கருத்துகளை பென்சில் அல்லது பேனாவினை கொண்டு மாணவர்கள் அடிக்கோடு இடுதல், குறித்து கொள்ளுதல் மற்றும் கூடுதல் தகவல்களை அந்தந்தப் பக்கங்களில் எழுதுதல் போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டும்.
* அனைத்து பாடங்களுக்கும் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தினந்தோறும் வீட்டுப்பாடம், ஒப்படைப்பு, செயல்பாடுகள் வழங்கிட வேண்டும். வழங்கப்படும் வீட்டுப்பாடம், ஒப்படைப்பு, செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக இருந்திட வேண்டும்.
வழங்கப்பட்ட வீட்டுப் பாடங்களை மாணவர்கள் செய்துள்ளதை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் அடுத்த நாளிலேயே மாணவர்களின் வீட்டுப்பாட நோட்டுப் புத்தகங்களை மதிப்பீடு செய்து தேதியுடன் கையொப்பமிட வேண்டும்.
பாட ஆசிரியர்கள் வீட்டுப்பாட நோட்டுப்புத்தகங்களை அன்றாடம் மதிப்பீடு செய்வதை, பள்ளியின் தலைமையாசிரியர் ஒவ்வொரு வகுப்பிலும் ஓவ்வொரு பாடத்திற்கும் 5 வீட்டுப்பாட நோட்டுப்புத்தகங்கள் என்ற வீதத்தில் தினந்தோறும் பார்வையிட்டு தேதியுடன் கையொப்பமிட வேண்டும்.
மாணவர்கள் தங்கள் பாட நோட்டுப்புத்தக குறிப்புகள் எழுதும் போதும், வீட்டுபாட நோட்டுகளில் வீட்டுப்பாடங்களை செய்திடும் போதும், தேதி குறிப்பிட வேண்டும். ஆசிரியர்கள் பாட நோட்டுப்புத்தகங்கள் மற்றும் வீட்டுப்பாட நோட்டுப்புத்தகங்கள் மதிப்பீடு செய்து கையொப்பமிடும் போது கட்டாயம் தேதியினை குறிப்பிட வேண்டும். • தமிழ், ஆங்கிலம் வாசிக்க தெரியாத மாணவர்களை இனங்கண்டறிந்து வகுப்பு வாரியான பெயர்ப்பட்டியலை தலைமை ஆசிரியர்கள் இவ்வார இறுதிக்குள் தயாரித்து மாவட்ட திட்ட அலுவலகம் மூலம் வழங்கப்படவுள்ள படிவத்தில் உடனடியாக பெயர்பட்டியலை வழங்கிடும் பொருட்டு தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.
• வாசிப்புத்திறனில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு Bridge Course மூலமாக ஜூலை இறுதிவரை வாசிப்பு திறனை மேம்படுத்த சிறப்பு தொடர் பயிற்சியினை வழங்கிட வேண்டும்.
• வழங்கப்பட்டுள்ள தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரை ஏடுகளில் கல்வியாண்டின் துவக்கத்திலிருந்தே மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
* கட்டுரைப் பயிற்சியின்போது மாணவர்கள் தங்கள் படைப்புத்திறனை வளர்த்துக்கொள்ளும் விதத்தில் சொந்த வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள் பயன்படுத்தி கட்டுரை எழுதுவதை தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும். இதனை தலைமையாசிரியர்கள் அவ்வப்போது அனைத்து வகுப்புகளின் கட்டுரைப் பயிற்சி ஏடுகளை ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும். மாணவர்களுக்கு இரட்டைவரி மற்றும் நான்குவரி நோட்டுபுத்தகங்களில் கையெழுத்துப் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
* செய்முறை பயிற்சிக்கான பாடவேளைகளில் செய்முறை பயிற்சிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். அறிவியல் செய்முறை பயிற்சி பாட வேளைகளில் கட்டாயம் மாணவர்கள் அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். அறிவியல் ஆய்வு உபகரணங்கள் ஆய்வகங்களில் பயன்பாட்டில் இருப்பதை அறிவியல் பாட ஆசிரியர் உறுதி செய்திட வேண்டும்.
* அறிவியல் பாடங்களில் உள்ள அறிவியல் கணக்கீடுகளை கட்டாயம் மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.
* கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்க்காக மாணவர்கள் ஒவ்வொரு பயிற்சிக்கும் புத்தம் புதிய வரைகட்டத்தாள் (Graph sheet) மற்றும் வரைபடத்தாளினை (Map sheet) தேதியிட்டு பயன்படுத்த வேண்டும். வாரத்திற்கு 3 வரைகட்டத்தாள் (Graph sheet) பயிற்சிகள் மற்றும் 5 வரைபடத்தாள் (Map sheet) பயிற்சிகள் மாணவர்களுக்கு
வழங்கப்பட வேண்டும். இதனை மாணவர்கள் தேதிவாரியாக (tag இட்டு) தொகுத்து வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து தேதியுடன் கையொப்பமிட்டிருக்க வேண்டும். தலைமை ஆசிரியரும் வாரம் ஒருமுறை ஆய்வு செய்து தேதியுடன் கையொப்பமிட வேண்டும்.
• அறிவியல் பாடப்பிரிவு வேளையில் கற்றல் கற்பித்தல் நடைபெறும் பொழுது பாடத்தலைப்பிற்கு உகந்த படங்கள் மற்றும் கணித பாடங்களில் தேவைக்கேற்ப படங்களை கரும்பலைகையில் வரைந்து கற்றல் கற்பித்தல் பணியினை மேற்கொள்ள வேண்டும்.
* சமூக அறிவியல் பாடப்பிரிவு வேளையில் உலக வரைபடம் (World Map), இந்திய வரைபடம் (India Map) மற்றும் தேவைக்கேற்ப வரைபட மாதிரிகளை கொண்டு கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
• கடந்த ஆண்டைப் போலவே பள்ளியில் அனைத்து மாணவர்களையும் நூலக பாடவேளையில் பள்ளி நூலகம் அழைத்து செல்ல வேண்டும். மாணவர்கள் வாசிக்க புத்தகங்கள் வழங்கப்படுதல் வேண்டும்.
* வகுப்புகளில் மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் சோர்வாகவோ, தனியாகவோ இருந்திட கூடாது. அவ்வாறு மாணவர்கள் இருந்திடும் பட்சத்தில் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் அம்மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகளை வழங்கிட வேண்டும்.
• மாணவர்கள் மன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பொருட்டு இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (JRC), சாரண சாரணியர் இயக்கம் (SCOUT & GUIDE), நாட்டு நலப்பணி திட்டம் (NSS), பசுமைப்படை (ECO CLUB) போன்ற கல்வி இணைச் செயல்பாடுகளில் பங்கேற்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.
• இளைஞர் செஞ்சிலுவை சங்கம், சாரண சாரணிய இயக்கம் செயல்படாத பள்ளிகளில் அந்த அமைப்புகளை துவக்கிட தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தந்த அமைப்புகளுக்கு பொறுப்பாசிரியர்களை நியமித்து அந்த அமைப்புகள் தங்கள் பள்ளிகளில் துவங்கிட தலைமையாசிரியர்கள் தக்க நடவடிக்கை எடுத்திடல் வேண்டும்.
* அவ்வாறு நியமிக்கப்படும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சிகள் நடைபெறும்போது அந்தந்த அமைப்புகளின் பொறுப்பாசிரியர்கள் பங்கேற்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.
* விளையாட்டு போட்டிகள், கலைத் திருவிழா, கலைஅரங்கம் போன்ற போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று வெற்றிபெறும் விதத்தில் ஆரம்பம் முதலே மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
• அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி வகுப்பு மற்றும் ஓவிய வகுப்புகள் உடற்கல்வி மற்றும் ஓவிய பயிற்சிக்காக மட்டுமே பயன்டுத்தபட வேண்டும்.
• உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு Battery Test மற்றும் Mass Drill நடத்துவதை தலைமையாசிரியர்கள் கண்காணித்து உறுதி செய்திட வேண்டும்.
• காலை இறை வணக்க கூட்டதிற்க்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்திட வேண்டும். இறை வணக்க கூட்டம் மற்றும் காலை மாலை இடைவேளைகளின் போது பள்ளிகளில் மாணவர்களின் ஒழுங்குசார் நடவடிக்கைகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் கவனம் செலுத்திட வேண்டும்.
* தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் NMMS, TRUST, NTSE, தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு, NEET மற்றும் JEE ADVANCE போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ள மாணவர்களை தேர்வு செய்து பெயர் பட்டியலை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும் மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து, வரும் வாரங்களில் கேட்கப்படவுள்ள படிவத்தில் உடனடியாக வழங்கிட வேண்டும்.
* ஆரம்பம் முதலே மேற்கண்ட தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்திடும் விதத்தில் ஒவ்வொரு தேர்விற்கும் ஒரு பொறுப்பாசிரியர் நியமித்து காலை மாலை சிறப்பு பயிற்சிகள் துவங்கப்பட வேண்டும்.
தங்கள் குறுவள மையத்திற்கு உட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் 5ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 6ம் வகுப்பு சேர்ந்தததையும், நடுநிலைப்பள்ளிகளில் 8ம் வகுப்பு முடித்தவர்கள் 9ம் வகுப்பில் சேர்ந்தததையும், உயர்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் 11ம் வகுப்பில் சேர்ந்தததையும் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கண்காணித்து எந்தெந்த மாணவர் எந்தெந்த பள்ளியில் சேர்ந்தார் என்ற விவரங்களை அறிக்கையாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். எந்தவொரு மாணவரும் விடுபடாமல், இடைநிற்றலை 100% குறைத்திட வேண்டும் என்ற முனைப்புடன் ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
• மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை தொடர்பான விவரங்களை கண்காணித்து விரிவான அறிக்கையினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் கட்டாய பொறுப்பு ஆகும். முதுகலை ஆசிரியர்கள் உயர்கல்வி படிப்புகள், உயர்கல்வி சேர்க்கை தொடர்பான விவரங்கள், கல்லூரிகள் குறித்த தகவல்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
* பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு துனைத்தேர்வுகளுக்கு அம்மாணவர்கள் தயாராவதை ஆசிரியர்கள் தொடர்ந்து உறுதி செய்திட வேண்டும்.
இந்த செயல்பாடுகள் அனைத்தும் தங்கள் பள்ளியில் எவ்வித தொய்வும் இன்றி பின்பற்றப் படுவதை துவக்கம் முதலே தலைமையாசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.
No comments:
Post a Comment