Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 18, 2023

NEET தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி: பள்ளி கல்வித் துறை தகவல்

நீட் தகுதித் தேர்வில் நடப்பாண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் ஜூன் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 11 லட்சத்து 45,976 (56.21%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 78,693 (54.45%) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதுதவிர தமிழக மாணவர் ஜே.பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

நடப்பாண்டு நீட் தேர்வை அரசுப்பள்ளி மாணவர்கள் 12,997 பேர் எழுதினர். அதில் 3,982 (30.67%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைவிட 4 சதவீதம் அதிகம். சென்ற ஆண்டு 14,979 மாணவர்கள் நீட் தேர்வெழுதியதில் 4,118 (27%) பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும், மாவட்ட அளவிலான தேர்ச்சியில் அதிகபட்சமாக சேலத்தில் 519 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் 235 பேரும், ஈரோடு, கள்ளக்குறிச்சியில் தலா 209 பேரும், காஞ்சிபுரத்தில் 202 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக தென்காசியில் 335 பேர் தேர்வில் பங்கேற்றதில் வெறும் 9 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அனுபவங்களில் அடிப்படையில் நடப்பாண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மேம்படுத்தப்படும் எனவும் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News