Join THAMIZHKADAL WhatsApp Groups
தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என தமிழ்நாடு அரசு பெயர் சூட்டி உள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதி படி, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று, குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், தகுதியான பயனாளிகள் யார் என்பது தொடர்பாகவும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகைப் பெறுவதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் என்பதை பட்டியலிட்டார். திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியத் தலைவர்களை கேட்டுக்கொண்டார்.
யாருக்கெல்லாம் கிடைக்காது?
பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித் தொகை கிடைக்காது. ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிகளும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை பெற முடியாது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள், 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் பெண்களுக்கும் அரசு உரிமைத் தொகை கிடையாது. மேலும் 3 ஆயிரத்து 600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்?
21 வயதிற்கு மேற்பட்ட மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய ஒரு பயனாளி கூட விடுபடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று மாவட்டச் ஆட்சியர்கள் கூட்டத்தில், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு எந்த கடையில் உள்ளதோ, அங்கு மட்டுமே உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணிப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகையை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment