Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 21, 2023

அரசு மருத்துவர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,021 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்க இடைக்கால தடை

அரசு மருத்துவர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 1,021 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்க தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அவ்வாறு கரோனா காலத்தில் பணியில் ஈடுபட்ட மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில், 6 மாதங்கள் தொடர்ந்து கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டு இருந்தால், அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் 5 ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

14 பேர் வழக்கு: இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 1,021 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில், கரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, 14 மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன் ஆஜராகி, மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, தமிழகத்தில் கரோனா காலகட்டத்தில் பணியாற்றிய மனுதாரர்களுக்கு 5 ஊக்க மதிப்பெண் வழங்கப்படவில்லை.

கரோனா காலத்தில் பணி: எனவே, 1,021 அரசு மருத்துவப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவில், கரோனா காலகட்டத்தில் 300 நாட்களுக்கும் மேலாக பணியாற்றியுள்ள மனுதாரர்களுக்கும் ஊக்க மதிப்பெண் வழங்கி, அவர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி என்.சதீஷ்குமார், இந்த வழக்கில் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, 1,021 அரசு மருத்துவப் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை ஆக.11-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

No comments:

Post a Comment