பள்ளிக் கல்வித் துறையில் அலகுவிட்டு அலகு மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்விஇயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த மே மாதமும், மனமொத்த மாறுதல் சமீபத்திலும் நடத்தி முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இதர துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுவதற்கான அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வை எமிஸ் தளம் வழியாக இணையதளத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 9-ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக சமர்ப்பிக்கவேண்டும் என்றும், அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு ஜூலை 14-ம் தேதி எமிஸ் தளம் வழியாக நடத்தப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது ஆசிரியர்கள் நலன் கருதி விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்பு அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment