Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 7, 2023

அரசு பள்ளியில் தலைவர், துணை தலைவர் பதவிக்கு தேர்தல் முறையில் 2 மாணவிகள் தேர்வு: இன்று பதவியேற்பு நிகழ்ச்சி

பழைய தாம்பரம் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சுமார் 660க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில், பல்வேறு வகையான போட்டிகளும், கல்விசாரா இணை செயல்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளனர்.

அந்த வகையில், ஜனநாயகப்பள்ளி 2023-24 என்ற தேர்தல் கருவை தாங்கிய மாணவர் தலைவர், மாணவர் துணை தலைவர் தேர்ந்தெடுக்கும் முறை ஜனநாயக முறை அடிப்படையில், ஒவ்வொரு மாணவரும் வாக்களித்து தேர்வு செய்கின்ற வழிமுறையில் நடத்திட திட்டமிடப்பட்டு வேட்பு மனு தாக்கல், வேட்புமனு தாக்கல் நிறைவு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு, வாக்கு சேகரிப்பு நிறைவு என தொடர்ச்சியாக ஒவ்வொரு நாட்களாக பள்ளியில் நடத்தப்பட்டது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமையில், மாணவர் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.

தேர்தல் பார்வையாளராக செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலக பள்ளி துணை ஆய்வாளர் வீ.கிருபாகரன் பங்கேற்று, தேர்தலினை பார்வையிட்டு, தேர்தலில் போட்டியிட்ட மாணவர்களை பாராட்டி, அறிவுரைகள் வழங்கினார். இத்தேர்தலில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் வாக்களிக்க தகுதி உடையவர்களாக கருதப்பட்டு, வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. அதில், தலைவர் மற்றும் துணை தலைவர் போட்டியிடும் மாணவர்களுக்குரிய சின்னங்கள் வாக்கு சீட்டுகளில் பொறிக்கப்பட்டிருந்தது. சின்னங்களை முத்திரையிட்டு எவ்வாறு தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விவரம் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளும் வாக்களித்து தேர்தல் நிறைவு செய்யப்பட்டது.

இத்தேர்தலில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும், மாணவர்களுக்கு தேர்தல் நடைபெற சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தனர். தேர்தலில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கலந்துகொண்டு, தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். இதனையடுத்து, பள்ளியில் நடத்தப்பட்ட தலைவர், துணை தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

இதில் மாணவர் தலைவர் பதவிக்கு 598 வாக்குகளில் 334 வாக்குகள் பெற்று 10ம் வகுப்பை சேர்ந்த ரா.தர்ஷினி என்ற மாணவி தலைவராகவும், மாணவர் துணை தலைவர் பதவிக்கு 598 வாக்குகளில் 328 வாக்குகள் பெற்று 9ம் வகுப்பை சேர்ந்த ஸ்ரீஹா என்ற மாணவி துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலில் போட்டியிட்டு, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி ரா.தர்ஷினி மற்றும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9ம் வகுப்பு மாணவி ஸ்ரீஹா ஆகியோர் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News