Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 2, 2023

சுக்கிரன் பெயர்ச்சி பலன்: சிம்மத்தில் கிரகங்கள் கூட்டணி.. 6 ராசிக்காரர்கள் வீட்டில் பண மழைதான்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சிம்ம ராசியில் செவ்வாய் பயணம் செய்ய சில நாட்களில் சுக்கிரன் கூட்டணி சேரப்போகிறார். ஆடி மாதம் முதல் சிம்மத்தில் இணைந்து பயணம் செய்யும் காதல் கிரகங்களுக்கு சனியின் பார்வையும், குருவின் பார்வையும் கிடைக்கப்போகிறது.

இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வைகளால் ஆடி மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு பிருகு மங்கல யோகமும், குரு மங்கல யோகமும் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

சுக்கிரன் பெயர்ச்சி: சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருந்தால் அது கோடீஸ்வர யோகமாக அமைகிறது. சுக்கிரன் ஒருவருக்கு நல்ல நிலையில் இருந்தால் வசதியான மனைவி அமைவார். நன்றாக சம்பாதிக்கும் மனைவி அமைவார். இந்த சுக்கிர பெயர்ச்சி யாருக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: மேஷ ராசிக்கு சுக்கிரன் 2ஆம் வீடான தனம் வாக்கு களத்திர ஸ்தான அதிபதி. ஐந்தாம் இடமான சிம்மத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைவதால் குழந்தைகளிடம் இருந்த தடைகள் நீங்கும். திருமணமாகாத பிள்ளைகளுக்கு நல்ல வரன் தேடி வரும். பூர்வீக சொத்துக்களின் பாக பிரிவினையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றவர்களின் மனதில் இருந்த கவலை நீங்கும். காரியங்கள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்குள் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது. மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களுக்கு சென்று விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்: உங்கள் ராசி நாதன் சுக்கிரன் நான்காம் வீடான சுகஸ்தானத்தில் செவ்வாயுடன் இணைந்து திக் பலம் பெறுவதால் தடைபட்ட காரியம் நிறைவேறும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். செயல்களால் புகழ் அடைவீர்கள். உதவும் மனப்பான்மை அதிகமாகும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அம்மா உடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பணியிடத்தில் இருந்த பிரச்சினை விலகும். வேலைப்பளு குறையும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் யோசித்து வாங்க வேண்டும் இல்லை எனில் செலவுகள் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் சில ஆலயங்களில் அம்மனுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தர பாதிப்புகள் மறையும்.

மிதுனம்: சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்திற்கு வரப்போகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். உடன் பிறந்தவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். காதல் ஜோடிகள் கவனமாக இருக்கவும். பெண்கள் வயதானவர்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். நெருப்பு, இயந்திரங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

கடகம்: கடக ராசிக்கு சுக்கிரன் லாப ஸ்தான அதிபதி சுக ஸ்தான அதிபதி. அவர் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலர் வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும். பெண்கள் விலை உயர்ந்த நகைகள் பணம் வாங்குவீர்கள். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட மேலும் நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் செவ்வாயுடன் குடியேறப்போகிறார். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிறு கோளாறுகள் வந்துவிடும். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் மணியடிக்கும். ஆடி போய் ஆவணி வந்தால் கெட்டி மேளச்சத்தம் கேட்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று மல்லிகை மலர் கொடுத்து வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

கன்னி: உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் உங்கள் ராசி நாதனுடன் கூட்டணி அமைத்து குடியேறப்போகிறார். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான டிவி பிரிட்ஜ் ஏசி போன்ற பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பார்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். மாணவர்கள் படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கிக் கொடுங்கள்.

துலாம்: உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். செவ்வாயும் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். திருமண வாழ்க்கையில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் அடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருமானம் வந்து பாக்கெட்டை நிரப்பும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பார்க்கலாம். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

விருச்சிகம்: சுக்கிரன் உங்கள் விரைய ஸ்தானதிபதி, களத்திர ஸ்தானதிபதி. அவர் இன்று முதல் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். கோபப்பட்டு பேசி நல்லதை கெடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் மனைவி அல்லது காதலியுடன் சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கித்தர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

தனுசு: பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் செவ்வாயுடன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக பயணம் செய்வீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக இருக்கப்போகிறது. வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். பணவரவும் அதிகரிக்கும். அப்பாவழியில் உதவிகள் தேடி வரும். சிவபெருமானுக்கு வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தரலாம். பசுமரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.

மகரம்: உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எட்டாம் வீட்டில் மறையப்போகிறார். அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் ஏற்கனவே அங்கே குடியிருக்கிறார் கூடவே சுக்கிரன் இணைவதால் மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் தேடி வரும் இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை இழப்பை தவிர்க்கலாம். விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட நன்மைகள் நடைபெறும்.

கும்பம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் உடன் பயணம் செய்யப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கனிந்து கல்யாணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் முதலீடு செய்யும் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். செவ்வாய், சுக்கிரன் பார்வை உங்கள் ராசியில் உள்ள சனிபகவானின் மீது விழுகிறது. பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் சமூகத்தில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

மீனம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறையப்போவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். இனிமையான பேச்சுக்களால் மனைவியை குளுமைப்படுத்துங்கள். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News