Join THAMIZHKADAL WhatsApp Groups
நம் வீட்டு சமையலறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான பொருட்கள் உள்ளன.
குறிப்பாக அஞ்சறைப் பெட்டியை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள ஒவ்வொரு பொருட்களுமே உடலில் மாயங்கள் ஏற்படுத்தக்கூடியவை. அதில் ஒன்று தான் வெந்தயம்.
கசப்புச் சுவையைக் கொண்ட வெந்தயம் பல்வேறு சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தை தினமும் சாப்பிட்டால், உடல் சூடு குறையும் என்பதை அனைவருமே அறிவோம்.
ஆனால் அந்த வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நீருடன் ஊற வைத்த வெந்தயத்தை உட்கொள்ளும் போது, இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
கீழே நீரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. செரிமானம் மேம்படும்
வெந்தயம் ஒரு நேச்சுரல் ஆன்டாசிட். இதை உட்கொள்ளும் போது அசிடிட்டி, வயிற்று உப்புசம் மற்றும் வாய்வு தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதுவும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, அந்த நீருடன் வெந்தயத்தை உட்கொள்ளும் போது, இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
2. கொலஸ்ட்ரால் கட்டுப்படும்
தற்போது கொலஸ்ட்ரால் பிரச்சனை நிறைய பேருக்கு உள்ளது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தாவிட்டால், அது மாரடைப்பு போன்ற இதய நோயின் அபாயத்தை அதிகரித்துவிடும். இந்த கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த வெந்தயம் பெரிதும் உதவி புரியும். அதற்கு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, அந்த நீருடன் உட்கொள்ள வேண்டும்.
இதனால் வெந்தயத்தில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இதை உட்கொண்டு வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும்.
3. மாதவிடாய் கால வலி குறையும்
பெண்கள் தினமும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, அந்த நீருடன் வெந்தயத்தை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிடிப்புகள் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பல ஆய்வுகளில் வெந்தய நீரில் உள்ள அல்கலாய்டுகள் மாதவிடாய் கால வலியைக் குறைக்க உதவுவது தெரிய வந்துள்ளது.
4. எடை இழப்புக்கு உதவும்
தற்போது பலரது கவலைகளுள் ஒன்றாக உடல் பருமன் உள்ளது. நீங்களும் உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியானால் வெந்தயத்தை தினமும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, உடலில் வெப்பத்தை உருவாக்கி, எடை இழக்கும் செயல்முறையை வேகப்படுத்தும்.
5. சருமம் மற்றும் தலைமுடிக்கு நல்லது
வெந்தயத்தில் டயோஸ்ஜெனின் என்னும் கலவை உள்ளது. இது ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் சருமம் மற்றும் தலைமுடியில் எவ்வித சேதமும் ஏற்படாமல் நல்ல பாதுகாப்பை வழங்கி, ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே நீங்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் காட்சியளிக்க விரும்பினால், வெந்தயத்தை ஊற வைத்து தினமும் சாப்பிடுங்கள்.
No comments:
Post a Comment