Join THAMIZHKADAL WhatsApp Groups
திருவெறும்பூர் தொகுதியில் பள்ளி கட்டடம், அங்கன்வாடி மையம், பொது சுகாதார வளாகம் உள்ளிட்ட நிறைவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று திறந்து வைத்தார்.காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளியில், பொது சுகாதார வளாகத்தை திறந்து வைத்த அமைச்சர், மாணவ - மாணவியரிடம் கலந்துரையாடினார்.
மேலும், காலை சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது:
தமிழக முதல்வரின் கனவு திட்டமான காலை சிற்றுண்டி திட்டம், அடுத்த கட்டமாக, இந்த கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை தேர்வு எழுத வைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளி மேலாண்மை குழுவினரை வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது, பள்ளி மேலாண்மை குழு மூலமாக, தற்காலிக ஆசிரியர்களை கொண்டு, வகுப்பு நடைபெற்று வருகிறது. புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை, மிக நீண்ட செயல்பாடாக உள்ளது. தேர்வாணையம் மூலமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வழக்குகள் இதையெல்லாம் சரி செய்து, புதிய ஆசிரியர்களை நியமிக்க சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது.
மேலும், 3,000 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு, ஆறு மாத காலமாகிறது. தற்காலிக ஆசிரியர்களை நியமிக்காமல், நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் காலி பணியிடங்களை நிரப்பாததால், தற்போது தொய்வு ஏற்பட்டு வருகிறது. விரைவில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் சீர் மரபினர் பள்ளிகள் ஆகியவற்றை பள்ளி கல்வித் துறையுடன் இணைப்பது குறித்து, பல கருத்துக்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக, அந்தந்த துறையிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்ட பின், முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment