ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பில் உள்ள ஜாக்டோ ஆசிரியர் சங்க கூட்டமைப்பு, மூன்றாக உடைந்துள்ளது.
ஒரு கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில், இன்னொரு கூட்டமைப்பை மட்டும் இயக்குனரகம் பேச்சுக்கு அழைத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28ம் தேதி, சென்னை டி.பி.ஐ., வளாகம் முன் போராட்டம் நடத்தப்படும் என, பள்ளிக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, டி.என்.எஸ்.இ., ஜாக்டோ அறிவித்துள்ளது.
ஆனால், போராட்டம் அறிவிக்காத, டி.என்.ஜாக்டோ என்ற சங்கத்தை, இன்று பேச்சு நடத்த வருமாறு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அறிவொளி கடிதம் அனுப்பியுள்ளார்.
மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக தலைவர் செ.நா.ஜனார்த்தனன்: டி.என்.எஸ்.இ., ஜாக்டோ அறிவித்துள்ள போராட்டம் முழு வெற்றி பெறும்.
ஒரு தரப்பு ஆசிரியர் சங்க கூட்டமைப்பை, பள்ளிக்கல்வி இயக்குனர், பேச்சுக்கு அழைத்திருப்பது, போராட்டத்தை பிசுபிசுக்க வைக்கும் முயற்சியாக தெரிகிறது.
இந்த நடவடிக்கையால், எங்கள் போராட்டத்தின் தீவிரத்தை குறைத்து விடமுடியாது.
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பி.பேட்ரிக் ரைமண்ட்: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, கட்சி, ஆட்சி என்ற பேதமின்றி, நாங்கள் தொடர் போராட்டம் நடத்துகிறோம்.
இதற்காக, ஆசிரியர் சங்க கூட்டமைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளபோது, சங்கங்களை பிளவுபடுத்தும் வகையில், ஒரு அமைப்பின் பெயரை குறிப்பிட்டு, பேச்சுக்கு அழைத்திருப்பது வருத்தமானது.
எங்கள் சங்கங்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல.
டி.என்.ஜாக்டோ தலைவரும், ஆசிரியர் முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளருமான கு.தியாகராஜன்: பள்ளிக் கல்வி இயக்குனர் பொறுப்பேற்றவுடன், ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து பேச்சு நடத்த, கடிதம் அளித்தோம்.
எங்களுக்கு முன்பே, தொடக்க கல்வி ஆசிரியர் சங்க கூட்டமைப்பான டிட்டோ ஜாக்குடன், இயக்குனர் பேச்சு நடத்தி விட்டார். தற்போது எங்களை பேச்சுக்கு அழைத்துள்ளார். நாங்கள் யாருக்கும் போட்டி இல்லை: எந்த சங்கத்தையும் உடைக்கவில்லை. 28ம் தேதி போராட்டத்தில், நாங்கள் பங்கேற்க மாட்டோம்.
டி.என்.எஸ்.இ., ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் மாயவன்: ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து பேச்சு நடத்தவும், போராட்டம் நடத்தவும், பள்ளிக் கல்வி இயக்குனருக்கு, ஒரு மாதம் முன்பே கடிதம் கொடுத்து விட்டோம்.
போராட்டம் அறிவித்திருக்கும்போது, ஆளும் கட்சிக்கு ஆதரவான கூட்டமைப்பை, பேச்சுக்கு அழைத்து உள்ளனர்.
இந்த விஷயத்தில், பள்ளிக் கல்வி இயக்குனர் அரசியல் செய்ய துவங்கி விட்டதாக நினைக்கிறோம். வரும் 28ம் தேதி, திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்.
No comments:
Post a Comment