Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 10, 2023

தான பத்திரம்.. தான செட்டில்மெண்ட் என்றால் என்ன.. தமிழ்நாடு பத்திரப்பதிவு விதிகள் என்ன?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தான பத்திரம் மற்றும் தான செட்டில்மெண்ட் என்றால் என்ன.. எப்படி செய்யப்படுகிறது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

இதுபற்றி சிந்தனை என்ற பெயரில் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள தகவலை பார்ப்போம்.

தான பத்திரம்: தான பத்திரம் & தான செட்டில்மெண்ட் என்றால் என்ன, எப்படி செய்யப்படுகிறது என்பதை பார்ப்போம். தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தம் இல்லாத வேறு ஒருவருக்கு கிரையம் செய்யாமல் முற்றிலும் இலவசமாக அளிப்பதை பதிவு செய்வதற்கு பயன்படும் பத்திரம் தான பத்திரம் ஆகும்.

இதற்கு கிரையம் செய்வதற்கு வாங்குவது போல தானம் செய்யப்படுகின்ற இடத்தின் அல்லது கட்டிடத்தின் அரசு மதிப்பீட்டில் 8% தொகைக்கு பத்திரம் வாங்க வேண்டும்.

தான செட்டில்மெண்ட் என்றால் என்ன? : தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தமுள்ள நெருங்கிய உறவுகளுக்குள் செய்து கொள்ளும் சொத்துரிமை மாற்றத்திற்கு பயன்படும் பத்திர பதிவுமுறை தான செட்டில்மெண்ட் ஆகும்.

இதன் மூலம் தன்மீது காட்டுகின்ற அன்பு, பரிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் தனக்குச் சொந்தமான சுய சம்பாத்திய சொத்தை அல்லது தனக்குச் சொந்தமான தனிப்பட்ட சொத்தை தனக்குச் சொந்தமான குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு மட்டும் எழுதி வைக்க முடியும்.

இதற்கு அந்த சொத்தின் அரசு மதிப்பீட்டின் தொகையில் ஒரு சதவீதம் தொகை அல்லது அதிகபட்சம் ரூபாய் 25,000/- தொகைக்கு பத்திரம் வாங்கினால் போதும்.

ஒருவர் தன் சொத்துக்களை,தான் உயிரோடு இருக்கும் காலத்திலேயே தனது உறவுகளுக்கு செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் எழுதிக் கொடுக்கும்போது, அந்த சொத்தைப் பெறுபவர் "குடும்ப உறவினராக" இருக்க வேண்டும் என இந்திய ஸ்டாம்ப் சட்டம் சொல்கிறது.

குடும்ப உறவினர்கள் செட்டில்மெண்ட்: குடும்ப உறவினர் என்றால் தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை இவர்கள் மட்டும்தான் "குடும்ப உறுப்பினர்கள்" என்று இந்திய ஸ்டாம்ப் சட்டம் சொல்லி உள்ளது;


செட்டில்மெண்ட் பணம் கொடுக்க வேண்டுமா?: தான செட்டில்மெண்ட் மூலம் ஒரு சொத்தை பெறுபவர் யாருக்கும் எந்தவிதமான தொகையும் கொடுக்க வேண்டியதில்லை. இந்த முறையில் ஒரு சொத்தை பெறுபவர்கள் மீது அவருடன் பிறந்தவர்களாக இருந்தால்கூட எந்தவிதமான வழக்கும் பதிவு செய்ய முடியாது.

பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா? : ஒருவர் தனக்கு மட்டும் சொந்தமான சொத்தையே தான செட்டில்மெண்ட் செய்ய முடியும். பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது செல்லாது மற்ற வாரிசுகள் வழக்குத் தொடுக்கலாம்.

செட்டில்மெண்ட் பத்திரம் எழுதுவதற்கு முன்னால் செய்ய வேண்டியவை: செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதுவதற்கு முன்னால், சில சட்ட நுணுக்கங்களை சரியாகப் புரிந்து கொண்டு எழுதவேண்டும்; பொதுவாக ஒருவர் தன்னுடைய சொத்தை, செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தினருக்கு எழுதிக் கொடுத்துவிட்டால், பின்னர் அந்த பத்திரத்தை ரத்து செய்யவே முடியாது.

இதனைத் தெரிந்து கொள்ளாமல், ஏதோ ஒரு எண்ணத்தில், யாரோ ஒருவருடைய தூண்டுதலின் பேரில் ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதி விடுகின்றனர். பின்னர், வாழ்க்கையில் ஏதோ ஒரு மன வருத்தம் ஏற்பட்டு, அதனை ரத்து செய்ய முயற்சி செய்கிறார்கள்; இப்படி ரத்து செய்ய அவர்களுக்கு சட்டத்தில் அதிகாரம் இல்லை.

சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பின் அடிப்படையில், பத்திரப் பதிவு அலுவலகங்கள், இவ்வாறான செட்டில்மெண்ட் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என அறிவுறுத்தி உள்ளது.

செட்டில்மெண்ட் சட்டம் என்ன சொல்கிறது? ஒரு சொத்தில், ஒருவர் தனக்குள்ள உரிமையை வேறு ஒருவருக்கு எழுதிக் கொடுத்து விட்டால், அந்த சொத்தில் அவருக்கு இருந்து வந்த உரிமை அத்துடன் முடிவுக்கு வந்து விடுகிறது. ஆகையால், அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை பின்னாளில் ரத்து செய்ய எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை என்பதுதான் சட்டம்; ஆனால், சிலர் "என் சொத்தை, நான் தானமாகத்தானே அப்போது கொடுத்தேன்; இப்போது எனக்கு விருப்பம் இல்லை என்பதால், அதை இப்போது ரத்து செய்யப் போகிறேன்! என்று நினைக்கிறார்கள்.ஒருவர் தான் விற்ற சொத்தை எப்படி திரும்ப வாங்க முடியாதோ, அதேபோலத்தான், ஒருவர் தானம் கொடுத்த சொத்தையும் திரும்ப வாங்க முடியாது.

உயிலுக்கும் தான செட்டில்மெண்டுக்கும் உள்ள வித்தியாசம்: தான செட்டில்மெண்ட் மூலம் எழுதிக் கொடுக்கும் சொத்தானது அதனை பதிவு செய்த உடனேயே அதனை எழுதிக் கொடுக்கப்பட்டவருக்குச் சொந்தமாகிவிடும். எழுதிக் கொடுத்தவர்க்கு எந்த உரிமையும் இல்லாமல் போய்விடும். அவரே நினைத்தாலும் அதனை ரத்து செய்யவே முடியாது.

உயில் மூலம் எழுதிக் கொடுக்கும் சொத்தானது அதனை பதிவு செய்தாலும், செய்யாவிட்டாலும் அந்த உயிலை எழுதியவர் இறந்த பிறகுதான் அமுலுக்கு வரும்.

உயிலை எழுதியவர் அதனை பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை உயிலை எழுதியவர் உயிரோடு இருக்கும் வரை அதனை எத்தனைமுறை வேண்டுமானாலும் மாற்றி மாற்றி எழுதிக் கொள்ளலாம். ஆகையால் உயிலைப் பொறுத்தவரை கடைசியாக எழுதப்பட்ட உயிலே செல்லும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News