Join THAMIZHKADAL WhatsApp Groups
பான் கார்டை (PAN - Permanent Account Number) ஆதாருடன் இணைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை நீண்டகாலமாக நாம் கேட்டு வருகிறோம்.
ஆனால் உங்களில் எத்தனை பேர் இதைச் செய்திருக்கிறீர்கள்?
ஒருவேளை நீங்கள் இதுவரை உங்களது பான் கார்டை , ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், என்ன விளைவுகள் ஏற்படும்?
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஜூன் 30, 2023ஆம் தேதியை பான்-ஆதார் இணைப்பிற்கான கடைசி காலக்கெடுவாக அறிவித்திருந்தது.
அதாவது ஜூன் 30ஆம் தேதிக்குள் உங்களுடைய பான் எண்ணை ஆதாருடன் இணைக்காமல் விட்டிருந்தால் ஜூலை 1ஆம் தேதி, 2023 முதல் உங்கள் பான் எண் செயலிழந்துவிடும்.
இதன் காரணமாக, பான் எண் தேவைப்படும் வங்கி உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். மேலும் உங்களது பணப் பரிவர்த்தனைகளிலும் சிக்கல் ஏற்படலாம்.
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது ஏன் அவசியம்?
ஒரே பான் எண் பலருக்கும் வழங்கப்பட்டிருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் ஒரு பான் எண்ணை ஒருவருக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்பது விதி.
எனவே பான் கார்டு தரவுகளை நகலெடுப்பதைத் தவிர்ப்பதற்காக, வரி செலுத்துவோர் அனைவரும் பான் விண்ணப்பப் படிவம் மற்றும் வருமான கணக்கில் ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
யாருக்கு கட்டாயம்?
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையின்படி(மார்ச் 2022), வருமான வரி சட்டத்தின் கீழ், ஜூலை 1, 2017 முதல் பான் எண்ணை பெற்றிருக்கும் அனைவரும், தங்களது ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் எனக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான் - ஆதார் இணைப்பதற்கு இது அவசியமாகும்.
இதற்கு ஜூன் 30, 2023 வரை காலக்கெடு அளிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை அந்த காலக்கெடுக்குவுக்குள், நீங்கள் உங்களுடைய பான் - ஆதாரை இணைக்கத் தவறியிருந்தால், இன்று(ஜூலை 1) முதல் உங்களுடைய பான் எண் செயலிழந்துவிடும்.
பான் - ஆதார் இணைப்பு யாருக்கு கட்டாயமில்லை?
கீழ்காணும் வகைகளில் வரும் மக்கள் பான் எண்னை, ஆதாருடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை.80 வயதிற்கு மேற்பட்டவர்கள்
வருமான வரிச் சட்டத்தின் கீழ் வராதவர்கள்
இந்திய குடிமகன் அல்லாதவர்கள்
பான் - ஆதார் இணைக்கவில்லை என்றால் என்ன சிக்கல்?பான்-ஆதார் இணைக்காத ஒருவர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.
நிலுவையில் உள்ள வருமான வரி கணக்கைச் செயல்படுத்த முடியாது.
செயலிழந்துவிட்ட பான் எண்ணைக் கொண்டிருக்கும் நபரின், நிலுவையில் உள்ள வருமான வரியைத் திருப்பி செலுத்தும் முறை செயல்படுத்தப்படாது.
தவறான அல்லது பிழையுடன் இருக்கக்கூடிய வருமான வரி அறிக்கையை மாற்றுவது தொடர்பான, செயல்முறையை மேலும் தொடர முடியாது.
பான் எண் செயலிழந்துவிட்டால், அதிக விகிதத்தில் வரி கழிக்கப்படும்
வங்கி தொடர்பான பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது. KYCக்கு பான் எண் அவசியம்.
பான் - ஆதார் இணைப்பை செபி (SEBI) ஏன் கட்டாயமாக்கியது?
ஏற்கெனவே கூறியது போல் KYC-ஐ பெறுவதற்கு, பான் எண் அவசியம். KYC-ஐ பெற்ற பிறகுதான், பத்திரச் சந்தையில் பரிவர்த்தனை செய்வது சாத்தியமாகும்.
எனவே இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI - Securities and Exchange board of India) பதிவு செய்யப்பட்ட நிறுவனம் மற்றும் சந்தை உட்கட்டமைப்பு நிறுவன சந்தையில் முதலீடு செய்வதற்கு KYC பெறுவது அவசியமாகிறது.
எனவே, பத்திரச் சந்தையில் செயல்பட முதலீட்டாளர்களுக்கு பான்-ஆதார் இணைப்பு அவசியம்.
பான் - ஆதார் இணைப்பது எப்படி?www.incometax.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கலாம்.
அதன் படிவத்தில் உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும்.
ஆதார் அட்டையில் உங்கள் பெயர் எப்படியிருக்கிறதோ, அதேபோல் இதிலும் உள்ளிட வேண்டும்.
உங்கள் ஆதார் அட்டையில், உங்களது பிறந்த தேதி மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தால், அதற்குரிய சரியான குறியீட்டை டிக் செய்ய வேண்டும்.
இப்போது சரி பார்ப்பதற்காக, படத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை எழுத வேண்டும்.
பின் 'Link Aadhaar' என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது உங்கள் திரையில் ஒரு பாப்-அப் செய்தி தோன்றும். அதில் உங்கள் ஆதார் உங்கள் பான் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்படும் என்ற செய்தி தெரிவிக்கப்படும்.
பார்வை மாற்றுத்திறனாளிகள் OTP க்கு கோரிக்கை விடுக்கலாம். இதில் கேப்ட்சா குறியீட்டிற்குப் பதிலாகப் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.
பான் கார்டு செயலிழந்துவிட்டால் என்ன செய்வது?
ஒருவரின் பான் செயலிழந்தால், அவர் தனது பான் எண்ணை மீண்டும் செயல்பட வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மார்ச் 28, 2023 தேதியிட்ட அறிவிப்பில் தெளிவுப்படுத்தியுள்ளது.
அதன்படி, ரூ.1000 அபராதம் செலுத்தி உங்களின் பான் எண்ணை மீண்டும் செயல்பட வைக்கலாம். எனினும், நீங்கள் எந்த தேதியில் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கிறீர்களோ அதில் இருந்து 30 நாட்களுக்கு பின்னரே உங்களின் பான் எண் மீண்டும் செயல்பட தொடங்கும். எடுத்துக்காட்டாக ஜூலை 5ஆம் தேதி நீங்கள் லீங்க் செய்தால் ஆகஸ்ட் 5ஆம் தேதி உங்கள் பான் மீண்டும் செயல்பட தொடங்கும்.
No comments:
Post a Comment