பட்டயக் கணக்காளர் பணிக்கான சிஏ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ஐசிஏஐ) சார்பில் சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் பணித்தேர்வு ஆண்டுதோறும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு சிஏ இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப்-2 என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இவற்றின் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது.
அதன்படி சிஏ இறுதித் தேர்வில் குரூப் 1 பிரிவில் 57,067 மாணவர்கள் பங்கேற்றதில் 6,795 பேர் ( 11.91%) தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் 2 பிரிவில் 61,844 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 19,438 பேர் (31.43%) வெற்றி அடைந்துள்ளனர்.
இந்த 2 பிரிவுகளையும் சேர்த்து 25,841 பேர் எழுதினர். அதில் 2,152 பேர் (8.33%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த இறுதித் தேர்வில் அகமதாபாத்தை சேர்ந்த ஜெயின் அக் ஷய் ரமேஷ் முதலிடமும், சென்னையை சேர்ந்த கல்பேஷ் ஜெயின் 2-வது இடமும், டெல்லியை சேர்ந்த பிரகார் வர்ஷ்னே 3-வது இடமும் பிடித்துள்ளனர்.
அதேபோல், இடைநிலைத் தேர்வு முடிவுகளை பொருத்தவரை குரூப் 1 பிரிவில் 19,103 பேரும் (18.95%), குரூப் 2 பிரிவில் 19,208 பேரும் (23.44%), இரு பிரிவுகளை சேர்த்து எழுதியவர்களில் 4,014 பேரும் (10.24) தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை http://icai.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment