Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 24, 2023

போராட்டங்களை அறிவித்திருக்கும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை நாளை பேச்சுவார்த்தை


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான நிலுவை இல்லாத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட அடுக்கடுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில் போராட்டங்களை அறிவித்திருக்கும் ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.

அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் 25-ந் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த அழைப்பில் பொதுவாக குறிப்பிட்டுள்ள சங்கம் என்பது குழப்பமாக இருக்கிறது என்றும், எங்களுக்கு அப்படி ஒரு அழைப்பு வரவில்லை என்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார். மேலும் அவர், வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திட்டமிட்டபடி பள்ளிக்கல்வி இயக்குனர் வளாகத்தில் போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

இதேபோல், 1.6.2009-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கமும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறது. அதன் மாநில தலைவர் ராபர்ட், 'திட்டமிட்டபடி வருகிற ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடக்கும்' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment