Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
மொத்தம் 3 கட்டங்களாக இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எப்போதும் மற்ற படிப்புகளைக் காட்டிலும் பொறியியல் படிப்பின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகமாகவே இருக்கும். இங்கு இருக்கும் பல நூறு பொறியியல் கல்லூரிகளே அதற்குச் சாட்சியாகும்.
ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையைத் தமிழக அரசு நடத்தி வருகிறது. எப்போதும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வந்த கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கப்படும். அதன்படி இந்தாண்டும் கலந்தாய்வுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த 2023-24 கல்வியாண்டை எடுத்துக் கொண்டால் தமிழ்நாடு முழுவதும் 430 இன்ஜினீயரிங் கல்லூரிகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட இருக்கிறது. இதற்கான தரவரிசை பட்டியலும் கலந்தாய்வு அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் தேதி மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. சிறப்புப் பிரிவில் மொத்தமுள்ள 8,764 இடங்களில் 775 இடங்கள் மட்டுமே நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு மொத்தம் 3 சுற்றுகளாகச் செப்டம்பர் 3ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது
www.tneaonline.orgஎன்ற இணையம் வாயிலாக மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். அல்லது இதற்காக அமைக்கப்பட்டுள்ள மையங்கள் மூலமாகவும் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு தங்களுக்குப் பிடித்த கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். இன்று தொடங்கியுள்ள முதல் சுற்றுப் பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த கலந்தாய்வு மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 9 வரை முதல் சுற்றுக் கலந்தாய்வு நடக்கும் நிலையில், ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 28 வரை 2ஆம் சுற்றுக் கலந்தாய்வும், செப்டம்பர் 15 முதல் 3ஆம் சுற்றுக் கலந்தாய்வும் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment