Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கத்திற்காக ரூ.404 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக் கூடங்களில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் பள்ளி வேலை நாட்களில் அரசு பட்டியலிட்டுள்ள சிற்றுண்டிகளில் ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும். குறைந்தது 2 நாட்களாவது அந்த பகுதியில் விளையும் சிறுதானியங்களின் அடிப்படையிலான உணவை வழங்க வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ள நல்ல பயன்களை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என கடந்த ஜனவரியில் முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் முதல் மற்றும் 2ம் கட்டத்தின் மூலம் பயன் அடைந்த மாணவர்களின் வருகை மற்றும் உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் விரிவுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் செயல்படும் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment