Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
மருத்துவக் கல்வியில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்த போதும், நீட் தேர்வில், மீண்டும் மீண்டும் தேர்வெழுதியவர்களின் ஆதிக்கம் அதிகமிருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதாவது, தமிழக அரசு வழங்கியிருக்கும் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், அரசுப் பள்ளியில் படித்த 2,993 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
ஆனால், அதே வேளையில், 2,363 மாணவர்கள் (79 சதவிகிதம் பேர்) நீட் தேர்வை மறுமுறை எழுதி தேர்வாகியிருக்கிறார்கள். ஆனால், வெறும் 630 மாணவர்கள்தான், நீட் தேர்வை முதல் முறை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர் என்கிறது புள்ளிவிவரம்.
மீதமிருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது. அதாவது, மருத்துவ சேர்க்கைக்கு தகுதி பெற்ற 25,856 பேரில் 8,426 பேர்தான் முதல் முறையாக நீட் தேர்வெழுதியவர்கள். 17,430 பேர் (67 சதவிகிதம்) மீண்டும் மீண்டும் தேர்வெழுதியவர்கள்.
தமிழகத்தில் இந்த ஆண்டு 28,849 விண்ணப்பதாரர்கள், மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்றிருக்கிறார்கள். இவர்களில் 19,793 பேர் அதாவது 69 சதவிகித மாணவர்கள் நீட் தேர்வை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள்.
வருங்காலத்தில் மாணவர்களின் இலக்குகள் என்பது மிகவும் சவாலாக மாறிக்கொண்டிருக்கிறது. அதாவது, பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதியதுமே, நீட் தேர்வெழுதும் மாணவர்களில் வெறும் 10 சதவிகிதம் பேர்தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடிகிறது. தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கும், நீட் தேர்வுக்கும் சேர்ந்து தயாராக வேண்டியது உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் முழுக்க முழுக்க நீட் தேர்வுக்கு மட்டும் தயாராகிறார்கள். எனவே, அவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெறும் நிலை உள்ளது என்று நீட் பயிற்சி மைய பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
அதாவது, நீதிபதி ஏகே ராஜன் ஆணையம் 2021ஆம் ஆண்டு நீட் தேர்வு குறித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், 2016 - 17ஆம் ஆண்டுகளில் வெறும் 12.47 சதவிகிதம் பேர் தான் மீண்டும் நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால், இது 2020 - 21ஆம் ஆண்டில் 71.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த அறிக்கையின்அ டிப்படையில்தான், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பயிற்சி மையங்களைத் தொடங்கி, கல்வியை வணிகமயமாக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும், நாட்டில் பயிற்சி மைய கலாசாரத்தைத்தான் நீட் தேர்வு ஏற்படுத்தியிருக்கிறது என்றும் கல்வியாளர்கள் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
சில மாணவர்கள் முதல் முறை நீட் தேர்வெழுதி தங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கிறார்கள். சிலர் காத்திருந்து மறுமுறை தேர்வெழுதுகிறார்கள். சிலரோ மீண்டும் மீண்டும் தேர்வெழுதுகிறார்கள். இதில், மாணவர்களின் அறிவுத்திறன் எதுவும் வெளிப்படுவதில்லை. பல வருட பயிற்சிகள் அல்லது தனியார் பயிற்சி மையங்களின் பயிற்சி இன்றி, நீட் தேர்வில் வெற்றி பெறுவது என்பது அனைவராலும் சாத்தியமில்லாதது என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
IMPORTANT LINKS
Thursday, July 20, 2023
NEET : மீண்டும் மீண்டும் தேர்வெழுதியோர் ஆதிக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment