பள்ளிக் கல்வித் துறையில், 10 நாட்களாக நீடித்த, சி.இ.ஓ., இடமாறுதல் பிரச்னையில், இறுதி தீர்வு காணப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் இருந்து திருப்பூர் செல்ல மறுத்த பெண் அதிகாரி, அங்கேயே தொடர அனுமதிக்கப்பட்டு உள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களான, ஆறு சி.இ.ஓ.,க்களுக்கு இட மாறுதல் வழங்கி, பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, கடந்த 11ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, அவர்கள் புதிய இடங்களில் சேர, பணியாற்றிய இடங்களில் இருந்து, பணி விடுவிப்பு உத்தரவு பெற்றனர்.
கோவை சி.இ.ஓ., சுமதிக்கு, ராணிப்பேட்டைக்கு மாறுதல் அளிக்கப்பட்டது. அவருக்கு, கோவை மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பிரிவு உபசார நிகழ்ச்சி நடத்தி வழியனுப்பினர். அவரும் நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்று, 'பசுமை நிறைந்த நினைவுகளே' என்ற பாடலை பாடி மகிழ்ந்தார்.
அந்த சூட்டோடு, ராணிப்பேட்டை சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பணியாற்றும் சி.இ.ஓ., உஷா, புதிய பணியிடமான திருப்பூருக்கு செல்ல மறுத்து விட்டார். அதையறிந்த திருப்பூர் சி.இ.ஓ., பாலமுரளி, தன் புதிய பணியிடமான கோவைக்கு மாறுவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில், திருப்பூரிலேயே இருந்தார்.
இதன் காரணமாக, கோவை மாவட்டத்துக்கு, 10 நாட்களாக சி.இ.ஓ., இல்லாமல், அந்த இடம் காலியாக இருந்தது. இன்னொரு புறம், கோவையில் இருந்து ராணிப்பேட்டை வந்த சுமதி, அந்த மாவட்டத்தில் பணியில் சேர முடியுமா, முடியாதா என்பது தெரியாமல் தவித்தார்.
இந்த விவகாரம், கடந்த 10 நாட்களாக நீடித்ததை அடுத்து, பள்ளிக் கல்வி துறை செயலர் காகர்லா உஷா, நேற்று இரவு புதிய உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி, 10 நாட்களாக இடமின்றி தவித்த சுமதி, கரூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றும் கீதா, திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆனால், இடமாற்ற உத்தரவை ஏற்க மறுத்த உஷா, ராணிப்பேட்டையிலே தொடர்கிறார். இவர், 2020ல் கோவை மாவட்டத்தில் பணியாற்றியபோது, அவரது வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். அதன்பின், அவர் அங்கிருந்து மாற்றப்பட்டார்.
இந்த பிரச்னையால், அவர் மீண்டும் கொங்கு மண்டலத்துக்கு மாற விரும்பவில்லை என, கூறப்படுகிறது.
- தினமலர் நாளிதழ் செய்தி
No comments:
Post a Comment