சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி' எனப் பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்த பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்தார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா சென்றிருந்த அவர், ஒருநாள் பயணமாக கிரீஸ் நாட்டுக்கும் சென்றார். அங்கிருந்து நேரடியாக நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பெங்களூரு வந்தார்.
ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடிக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து இஸ்ரோ மையத்துக்கு சென்றார். அப்போது சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த பாஜகவினர் அவர் மீது மலர்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இஸ்ரோ மையத்தில் அதன் தலைவர் சோம்நாத் மற்றும் சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளை பிரதமர் மோடி சந்தித்து கைகளை குலுக்கியும், ஆரத்தழுவியும் பாராட்டினார். சோம்நாத் அவருக்கு லேண்டர் எடுத்தப் புகைப்படங்களை பரிசாக வழங்கினார். திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், மோடிக்கு லேண்டரின் மாதிரியை பரிசாக வழங்கினார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்
பின்னர் விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியபோது நான் தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருந்ததால் விஞ்ஞானிகளுடன் இருக்க முடியவில்லை. ஆனால் என்மனம் முழுவதும் இங்குதான் இருந்தது. அந்த கடைசி 15 நிமிடங்கள் எனக்கு படபடப்பு அதிகமாக இருந்தது.
வெற்றி பெற்றவுடன் முதலில் இஸ்ரோவுக்கு போக வேண்டும் என தோன்றியது. மாநாட்டை முடித்த கையோடு விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்த இங்கு வந்திருக்கிறேன்.
இந்த திட்டத்தின் காரணமான விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன். உங்கள் பொறுமைக்கும், கடின உழைப்புக்கும், உத்வேகத்திற்கும் தலைவணங்குகிறேன். இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் பெருமையை, கவுரவத்தை நாம் உலகத்துக்கே நிரூபித்துள்ளோம்.
சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியில் பெண் விஞ்ஞானிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு 'சிவசக்தி மையம்' என பெயர் சூட்டப்படும். வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும்.
கடந்த 2019-ம் ஆண்டு நிலவில் சந்திரயான்-2 லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு 'திரங்கா மையம்' எனப் பெயர் சூட்டப்படும். தோல்வி நிரந்தரமில்லை என்பதை காட்டவே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. வருங்கால சந்ததியினர் அறிவியலை ஆர்வத்துடன் எடுத்துக் கொள்ளவும், அதை மக்கள் நலனுக்காக பயன்படுத்தவும் ஊக்குவிப்போம். மக்கள் நலனே நமது உச்சக்கட்ட அர்ப்பணிப்பாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறும்போது, "பிரதமர் நரேந்திர மோடி, எங்கள் ஒவ்வொருவரையும் பாராட்டுவதற்காக அலுவலகத்துக்கு வருகை தந்தார். அவருடைய அருமையான பேச்சைக் கேட்டோம். அவர் எங்களை வெகுவாக பாராட்டினார். அவர் 'திரங்கா' என்றும், 'சிவசக்தி' என்றும் அவர் பெயரிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் நமது நாடு வலுப்பெறும் வகையில், இளம் தலைமுறையினருக்காக மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கினார். பிரதமருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment