Join THAMIZHKADAL WhatsApp Groups
பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் உள்ள 254 உதவி பேராசிரியர்கள் நியமனங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் இருநபர் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆறு கல்லூரிகளில் 2013 முதல் 2015ம் ஆண்டுகளில் உதவி பேராசிரியர்கள் நியமனங்கள் நடந்தன. இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து 2022-ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உதவி பேராசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், 254 உதவி பேராசிரியர்களின் பணி நியமனத்தை ஒட்டுமொத்தமாக செல்லாது என அறிவித்த தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து 2022ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "ஆவணங்களை ஆய்வு செய்ததில், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. தகுதி இல்லாதவர்களின் நியமனங்கள் ரத்து செய்யப்பட வேண்டும், என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இருப்பினும், தகுதியானவர்களின் பணியில் தலையிட முடியாது. இந்த நியமனங்கள் தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகியும், உயர்கல்வித் துறை செயலாளரும் அளித்த அறிக்கைகளில் குறைகள் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, அவற்றின் அடிப்படையில் மேல்முறையீட்டு வழக்கில் இறுதி தீர்ப்பளிக்க முடியாது” எனக் கூறி, உதவிப் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி B.கோகுல்தாஸ் தலைமையில் இரு நபர் குழுவை நியமித்து உத்தரவிட்டனர். நீதிபதி கோகுல்தாஸுக்கு உதவியாக, சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் ஃப்ரீதா ஞானராணியை நியமித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தக் குழு, உதவி பேராசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் தேவைப்படும் கல்வித் தகுதி ஆகியவற்றை ஆய்வு செய்து, தகுதியானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா, இல்லையா என்பது குறித்து செப்டம்பர் 27-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 7ம் தேதி முதல், பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் இக்குழு செயல்பட வேண்டும். ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை நியமனம் பெற்றவர்கள், குழு முன் ஆஜராகி விளக்கமளிக்கலாம். நியமனம் பெற்றவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை ஆய்வு செய்து, சீல் வைத்த கவரில் அறிக்கையை தாக்கல் செய்ய குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 29ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment