Join THAMIZHKADAL WhatsApp Groups
பகுதி நேர உடற்கல்வி ஆசிரியா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஆக.29-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
ஓவியம், இசை, தையல், கைத்தொழில் ஆகியவற்றுக்கான இடமாறுதல் கலந்தாய்வு முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பகுதிநேர உடற்கல்வி ஆசிரியா்களுக்கு முதலில் பணிநிரவல் கலந்தாய்வும், பின்னா் மாவட்டத்துக்குள்ளும் அதன் பின்னா் மாவட்டம் விட்டு மாவட்டமும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
பகுதிநேர ஆசிரியா்கள் கலந்தாய்வின்போது பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். உடற்கல்வி ஆசிரியா் கலந்தாய்வு ஆக.29-ஆம் தேதி நடத்தப்பட வேண்டும். மாறுதல் கோரும் ஆசிரியா்கள் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியா்களிடம் ஆக.16-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களை எமிஸ் தளத்தில் ஆக.17-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு எமிஸ் தளத்திலிருந்து பெறப்படும் ஒப்புதல் நகலை தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவா்களின் எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு மட்டுமே பணி மாறுதல் வழங்கப்படும். முறையான பணியிடத்தில் நியமனம் பெற்ற உடற்கல்வி ஆசிரியா்கள் பணிபுரியும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படமாட்டாது.
மாறுதல் பெறும் பகுதி நேர ஆசிரியா்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் மாறுதல் பெற்ற பள்ளியில் உடனடியாக பணியில் சேர வேண்டும். ஆசிரியா்கள் விருப்பத்தின் பேரில் மாறுதல் ஆணை பெறுவதால் இந்த ஆணையை ரத்து செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ கோரும் கோரிக்கைகளை பரிசீலிக்க இயலாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment