கைனெடிக் எனர்ஜி (Kinetic Energy) நிறுவனம் மத்திய பிரதேசத்தில் மாநில அரசின் உதவியுடன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 200 ஃப்ளக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்கி உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு எதற்காக பரிசு? பரிசாக வழங்கப்பட்டுள்ள கைனெடிக் எனர்ஜியின் ஃப்ளக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
புனேவை சேர்ந்த எலக்ட்ரிக் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் கைனெடிக் கிரீன் எனர்ஜி & பவர் சொலியுஷன்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தின் ஃப்ளக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மத்திய பிரதேசத்தில் 200க்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில் கைனெடிக் நிறுவனத்தின் சிஇஓ மட்டுமின்றி, மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் அவர்களும் கலந்துக் கொண்டார்.
குறிப்பிட்டு இந்த 200+ மாணவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு இருப்பதற்கு காரணம், இவர்கள் மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த 12ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சிறப்பான மதிப்பெண்களை பெற்றவர்கள் ஆவர். மாணவர்களுக்கு இந்த ஊக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி மத்திய பிரதேசத்தின் டாமோ என்ற பகுதியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு இருப்பது கைனெடிக் எனர்ஜி நிறுவனத்தின் அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஃப்ளக்ஸ் ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.1kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 120கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை இயக்கி செல்ல முடியும்.
கைனெடிக் ஃப்ளக்ஸின் பேட்டரியை ஸ்கூட்டரில் இருந்து தனியாக நீக்க முடியும். இவ்வாறு கொண்டு சென்று, பேட்டரியை சார்ஜ் ஏற்றினால், பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆக 3இல் இருந்து 4 மணிநேரங்கள் வரையில் தேவைப்படும். ரெட்ரோ-ஸ்டைல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான கைனெடிக் ஃப்ளக்ஸில் வட்ட வடிவில் ஹெட்லேம்ப், தட்டையான இருக்கை, BLDC எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, செண்ட்ரல் பிரேக்கிங் சிஸ்டம் (CBS), ஆண்டி-தீஃப்ட் அலாரம், டிஜிட்டல் டிஸ்பிளே உள்ளிட்டவையும் கைனெடிக் ஃப்ளக்ஸில் இடம்பெறுகின்றன. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹோம் மோட் என்ற ரைடிங் மோட் உள்ளது. இது பேட்டரி சார்ஜை பின்னர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சேமித்து வைக்கும். அதிகப்பட்சமாக மணிக்கு 72kmph வேகத்தில் இயங்கக்கூடிய கைனெடிக் ஃப்ளக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.18 லட்சமாக உள்ளது.
இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசாக வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கைனெடிக் க்ரீன் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான சுலாஜ்ஜா ஃபிரோடியா மோட்வானி பேசுகையில், "12ஆம் வகுப்பில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களை நான் வாழ்த்துகிறேன். இந்த மாணவர்கள் கைனெடிக் கிரீன் ஃப்ளக்ஸின் பெருமைக்குரிய ஓனர்களாக மாறுவதில் நான் பெருமைப்படுகிறேன்.
இந்த தலைமுறை ஆரம்பத்திலேயே எலக்ட்ரிக் இயக்கத்தை ஏற்றுக் கொள்வதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முயற்சியின் வெற்றிக்கு ஆதரவளிக்க எங்களுக்கு வாய்ப்பளித்த மத்திய பிரதேச அரசுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவில் நிலையான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இந்த திட்டம் நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை தத்தெடுக்க அதிகமான மக்களை ஊக்குவிக்கும் என நம்புகிறேன்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கைனெடிக் போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் பிரபலமாக வேண்டுமெனில், முதலில் அதன் தயாரிப்புகள் மக்களிடத்தில் அதிகமாக செல்ல வேண்டும். அந்த வகையில் பார்த்தால், மத்திய பிரதேச அரசின் இந்த திட்டம் ஒருவழியில் கைனெடிக் நிறுவனத்திற்கு நன்மை அளிக்கக்கூடியதே. ஆனால், தற்போது 12ஆம் வகுப்பை முடித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு அதிகப்பட்சமாக மணிக்கு 72கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய 2-வீலர் வழங்கப்பட்டு இருப்பது எந்த அளவிற்கு சரியானது என தெரியவில்லை.
No comments:
Post a Comment