Friday, August 4, 2023

கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம்: ஆக.7-ம் தேதி வரை நீட்டிப்பு

கல்லூரி பேராசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்ஆக.7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் செப். 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கற்றல், கற்பித்தல் பணியில் சிறந்துவிளங்கும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டு கல்லூரி பேராசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் பணிகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மேற்கொண்டு வருகிறது.

இந்த விருதுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசம் ஆக.7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேராசிரியர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், ஐடிஐ பயிற்றுநர்கள் ஆகியோர் www.awards.gov.in மற்றும் nat.aicte-india.org ஆகிய இணையதளங்கள் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதில் தேர்வாகும் சிறந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவரால் டெல்லியில் செப்.5-ம் தேதி விருது வழங்கப்படும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News