Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 14, 2023

துணை மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் இணையவழி கலந்தாய்வு

பிஎஸ்சி நா்சிங், பிபாா்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழிக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.14) தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங், பிபாா்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகை துணை மருத்துவப் பட்டப்படிப்புகள் உள்ளன. அதற்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,000-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமாா் 14,000 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோக்கை நடைபெறுகிறது. நிகழாண்டில் இந்த படிப்புகளில் சேர 66,696 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்த நிலையில், தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

19 துணை மருத்துவப் படிப்புகளுக்குமான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக. 14) இணையவழியில் தொடங்குகிறது. இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்கள் ஆக.14 காலை 10 மணி முதல் வரும் 18-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளங்களில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தோவு செய்யலாம். ஆக.21-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆக.22-ஆம் தேதி இடஒதுக்கீடு ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆக.28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரியை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment