Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 29, 2023

தேசிய விருது பெற எங்களில் ஒருவருக்குக் கூடவா தகுதியில்லை!?

இந்திய மக்களின் நினைவில் வாழும் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி வீ.இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நன்நாளில் ஒன்றிய அளவில் சிறந்து விளங்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நடுவண் அரசு சார்பில் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்படுவது என்பது வழக்கமாக உள்ளது.

அதன்படி, நடப்புக் கல்வியாண்டில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துத் தரப்பு ஆசிரியர்களிடமிருந்து கடந்த ஜூன் மாதம் விண்ணப்பங்கள் மற்றும் சான்றாதாரங்கள் அனைத்தும் இணையவழியில் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து தகுதியான 50 பேர் விருதுக்கு தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள விவரப் பட்டியலை ஒன்றியக் கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதி ஆகியோர் தேர்வாகியுள்ள விவரம் அறிந்த ஒன்றாகும்.

இவர்களுக்கு எதிர்வரும் ஆசிரியர் நாளன்று டெல்லி விஞ்ஞான் பவனில் வெகுசிறப்பாக நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் மேதகு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கரங்களால் விருதும் பதக்கமும் பாராட்டும் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டியது கடமையாகும்.

இந்தச் சூழ்நிலையில், தொடக்கக்கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்து வரும் சற்றேறக்குறைய 70,000 ஆசிரியர்களுள் ஒருவர் கூட இல்லாதது வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. அதற்காக யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று கருத வேண்டியதில்லை. கடந்த 2021, 2022 ஆண்டுகளில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுள் ஒருவர் இந்த விருதைப் பெற்றிருப்பது எண்ணத்தக்கது. அதற்கு முந்தைய ஆண்டு இதேபோல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவே அனைவரையும் உள்ளடக்கிய ஓர் ஒப்பற்ற திருநாடாகும். அப்படியிருக்க, மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்களை அவர்தம் செம்மைப்பணிகளைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் ஆசிரியர் திருநாளில் ஒரு குறிப்பிட்ட தரப்பு ஆசிரியர் சமூகம் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதென்பது ஏற்கத்தக்கது அல்ல. எம் பிரதிநிதிக்கான வாய்ப்பும் அங்கீகாரமும் வரவேற்பும் கொடுக்கப்படாத இடத்தில் தமக்கென்ன வேலை வேண்டிக்கிடக்கிறது என்று புறந்தள்ளிக் கடந்து செல்லும் நோக்கும் போக்கும் இதன் காரணமாக ஒவ்வொரு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் எழுவதைத் தடுக்க இயலாது.

எங்கும் எதிலும் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கூட்டு வளர்ச்சியில் தான் ஒரு நாட்டின் ஆன்மா பொலிவுறும்; வளமுறும். எல்லா பூக்களையும் பூக்க விடுவதுதான் பன்மைப் பூத்த பாரத மண்ணின் அடையாளம் ஆகும். இதை யாரும் மறப்பதும் மறுதலிப்பதும் திட்டமிட்டுத் தவிர்ப்பதும் ஒருபோதும் அழகல்ல.

அவரவர் தம் தனித்துவ அடையாளங்களைத் தேடுவதும் அதுகுறித்து பேசுவதும் பாதிக்கப்படும்போது உரிமைக்காகக் குரல் எழுப்புவதும் உலக சூழலில் அடையாள அரசியலாகப் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் வாயில்லாப் பூச்சிகளாக இருக்கும் காலம் அருகிவிட்டது. இஃது இயற்கையானதும் இயல்பானதும் கூட.

இனிவரும் காலங்களில் தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் அரும்பெரும் பணியில் ஈடுபடும் நடுவர் குழு கட்டாயம் தொடக்கக்கல்வியில் மூச்சு விடக்கூட நேரமின்றி நாளும் பொழுதும் மாணவர்களுக்காக உழைத்தும் மாணவர்களுடன் உழன்றும் வருகிற தொடக்கப்பள்ளி ஆசிரியர் பேரினத்துள் தகுதி மிக்க ஒருவரையாவது பரிசீலனை செய்ய முன்வருவது என்பது இன்றியமையாதது. 'எம்மில் ஒருவருக்குக் கூடவா தேசிய நல்லாசிரியர் விருதைப் பெறத்தக்க தகுதி இல்லை!' என்கிற கேள்வி இதுபோன்ற இனிய சூழலில் எழாமல் இருக்கும். அதுவரை குறையொன்று இருக்கிறது என்று தொடக்கக்கல்வி ஆசிரியர் சமூகத்தின் புலம்பல்கள் தொடரத்தான் செய்யும்!

எழுத்தாளர் மணி கணேசன்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News