Join THAMIZHKADAL WhatsApp Groups
பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தில் வரும் மிகச் சிறப்புடைய நாளாக இந்த விழா கருதப்படுகிறது.
குறிப்பாக, காவிரி பாயும் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகவும் குதூகலத்துடனும் கொண்டாடப்பட்டுவந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் கொண்டாடும் விழாவாக மாறியிருக்கிறது.
பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடிப்பெருக்கு அன்று எதை வாங்கினாலும் அது பன்மடங்காக பெருகும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது. குறிப்பாக ஆடிப்பெருக்கில் சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றுவது சிறப்பான அம்சமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆடிப்பெருக்கு அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு நீர்நிலைகளுக்கு சென்று நீராடி இறைவனை வழிபடுவது வழக்கம்.
ஆகஸ்ட் 03 ஆம் தேதி வியாழக்கிழமையன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி துவிதியை திதியும், பிற்பகல் வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் வருகிறது.
வியாழக்கிழமை என்பதால் அன்று காலை 10.45 முதல் 11.45 வரை மட்டுமே நல்ல நேரம் உள்ளது. மாலையில் நல்ல நேரம் கிடையாது. காலை 6 முதல் 07.30 வரை எமகண்டமும், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும் உள்ளது. இதனால் காலை 07.35 மணிக்கு மேல் வழிபாட்டினை துவங்கி, பகல் 01.15 மணிக்கு முன்னதாக முடித்து விடுவது நல்லது.
மேலும் மங்களப் பொருட்களை நீரில் விட்டு அம்பாளை பூஜிப்பதும் விசேஷமாக இருக்கிறது. ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று வீட்டின் பூஜை அறையில் தங்கம், வெள்ளி காசுகள், நாணயங்களை வைத்து வணங்கி அதை பீரோவில் வைக்க செல்வ வளம் பெருகும்.
ஆடிப்பெருக்கன்று காவிரித் தாயை வணங்கினால் ஆண்டு முழுவதும் குடும்பத்தைத் தீமை வராமல் காவிரித்தாய் காப்பாள், குடும்பங்கள் செழிக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் விரதமிருந்து வழிபட்டால் மனம் போல மாங்கல்யம் கிடைக்கும். நல்ல கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை.
ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் ஆடிப்பெருக்கன்று புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க ஆடிப்பெருக்கு நாளில் காவிரி அன்னையை வழிபடுவார்கள். ஆடிப்பெருக்கன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்.
No comments:
Post a Comment