Join THAMIZHKADAL WhatsApp Groups
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் 600 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் எண்ணித் துணிக எனும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார்.
அப்போது சேலத்தை சேர்ந்த ஒரு மாணவரின் பெற்றோர் ஆளுநரிடம், நீட் பயிற்சி வகுப்புக்கு பிள்ளைகளை அனுப்பி செலவு செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் கல்வி பொது பட்டியலில் இருப்பதால் அது குறித்த முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப நான் கையெழுத்திட வேண்டும். ஆனால் நீட் விலக்கு மசோதாவிற்கு நான் நிச்சயம் ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன். நீட் தேர்வுக்கு ஒரு போதும் நான் தடை சொல்ல மாட்டேன்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டித் திறனை கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே மாணவர்களை நீட் தேர்வுக்கும் தயார் செய்யலாம். நீட் தேர்வு அரசியலாக்கப்படுகிறது. மாணவர்கள் வேறு பிரச்சினைக்காக தற்கொலை செய்யும் போது அரசியல்வாதிகள் ரூ 10 லட்சம், ரூ 20 லட்சம் என கொடுத்து கொடுத்து நீட் தேர்வால்தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
நீட் தேர்வுக்கு முன்பு தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆண்டுக்கு 30 முதல் 40 பேர் வரை கூட மருத்துவம் பயில முடியாத நிலை இருந்தது. ஆனால் நீட் தேர்வு அந்த வணிக அரசியலை உடைத்தெறிந்துவிட்டது. இதனால் 2016 க்கு பிறகு ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவானது என ஆளுநர் மிகவும் ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.
அதே பெற்றோர் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முன்பே மருத்துவ கட்டமைப்பும் மருத்துவ கல்லூரியின் கட்டமைப்புகளும் நன்றாகத்தான் இருந்தது என கேட்டதற்கு ஆளுநர் கூறுகையில் நீங்கள் சொல்வது தவறு அது போல் தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகள் இல்லை. நீங்கள் உட்காருங்கள் என ஆளுநர் தெரிவித்தார்.
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுக, திமுக ஆட்சியில் சட்டசபையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு மசோதா அனுப்பப்பட்டது. இதை திமுக ஆட்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருப்பி அனுப்பினார். அதற்கான காரணங்களையும் அவர் தெரித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை கடந்த ஆண்டு மே மாதம் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment