Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 14, 2023

நியமனத்தேர்வை நடத்தக்கோரி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

நியமனத்தேர்வை நடத்தக்கோரி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் போலீசார் போராட்டத்தை பாதியில் கலைத்துவிட்டனர்.

தகுதித்தேர்வு

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரிஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதலாவது தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2013-ம்ஆண்டு நடைபெற்ற டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்க வெயிட்டேஜ் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

நியமனத்தேர்வு

வெயிட்டேஜ் முறையிலான பணி நியமனத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அம்முறை கைவிடப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு ஆசிரியர் நியமனத்துக்கு புதிய முறை கொண்டுவரப்படும் என்றும் அதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்றும் பணி நியமனத்துக்காக மீண்டும் ஒருபோட்டித் தேர்வு நடத்தக் கூடாது என்று தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உண்ணாவிரதம்

இந்தநிலையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய போட்டித்தேர்வை (நியமனத்தேர்வு) நடத்தக்கோரி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரிய-ஆசிரியைகள் 100-க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்று கூறி அவர்களை மதியம் 1 மணி அளவில் கலைந்துபோக செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கூறியதாவது:-

உடனடியாக நடத்த வேண்டும்

கடந்த 2013 முதல் 2022-ம் ஆண்டு மற்றும் நடப்பாண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்று, அரசாணை எண் 149-ல் குறிப்பிட்டுள்ள படி நியமன தேர்வுக்கு தயாராகி வருகிறோம். திருச்சி மாவட்டத்தில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். அனைத்து அரசு பணிகளிலும் மதிப்பெண் அடிப்படையில்தான் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை டிஆர்.பி., தேர்விலும், மதிப்பெண் முறையே பின்பற்றுகிறது. எனவே, அரசாணை எண்:149-ன்படி நியமன தேர்வை உடனடியாக நடத்த வேண்டும். நியமனத்தேர்வை ரத்து செய்தால், இளைஞர்கள் ஆசிரியர் பணியை வெறுக்கும் அபாய நிலை ஏற்படும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News