Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 28, 2023

சோதனை மேல் சோதனை! சொல்லாமல் வந்த வேதனை! ஆசிரியர் கூட்டணியின் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

மாநில மையம் நாள்: 28.08.2023

ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடு செய்யும் பணியில் மாணவர்கள்!

சோதனை மேல் சோதனை!

சொல்லாமல் வந்த வேதனை!

தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம்!

சுவரொட்டி இயக்கம்(Wallposter)!

ஆகியவற்றை நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு!

கொரோனாக்கால கற்றல் இடைவெளியைப் போக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் "எண்ணும் எழுத்தும் திட்டம்" கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக உள்ளது என்பது திட்டத்தைச் செயல்படுத்தும் ஆசிரியர்களின் கருத்து.காரணம், இத்திட்டம் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரத்தைப் பெருமளவில் விழுங்கி எப்போதும் கைபேசியில் ஆன்லைன் தேர்வு வைக்கும் திட்டமாகவே தற்போது நடைமுறையில் உள்ளது.இதனால் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறதே என்ற கவலை ஆசிரியர் சமூகத்திற்குப் பெருமளவில் உள்ளது."இத்திட்டம் ஒரு மாபெரும் திட்டம்" என்பது போன்ற பிம்பத்தை சில அதிகாரிகள் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர இதில் வேறொன்றுமில்லை. இது தொடர்பாக ஆசிரியர்கள் தரப்பில் இருந்து எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தமிழ்நாடு அரசின் செவிகளுக்கு இதுவரை எட்டவில்லை.காரணம் "ஆசிரியர்கள் பணிச் சுமையாக நினைத்துத்தான் இவ்வாறு கூறுகிறார்களோ?" என்ற தவறான எண்ணம் சில அதிகாரிகளுக்கு இருப்பதுதான்.

இந்தச் சூழலில் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (SCERT) இயக்குநர் அவர்கள் 23.08.2023 அன்று உயர்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதம் தற்போது மாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அக்கடிதத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு/அரசு உதவி பெறும்/ தனியார் கல்வியியல் கல்லூரிகளில் தற்போது பயிலும் மாணவர்களைக் கொண்டு மதிப்பீடு நடைபெற உள்ளதாக கூறியுள்ளது எவ்விதத்திலும் ஏற்கவே இயலாத ஒன்றாக உள்ளது. இது போன்ற நடைமுறை இதற்கு முன் தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத ஒன்று. மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடு செய்வது என்பது உளவியல் ரீதியாகவே ஆசிரியர்களைப் பாதிக்கும் விஷயமாகும். ஆசிரியர்களின் கற்பித்தலை அவமதிக்கும் செயலாகவும் இது கருதப்படும். இதுபோன்ற ஆய்வுகள் மற்றும் மதிப்பிடுதலை உரிய அலுவலர்கள் தான் மேற்கொள்ள வேண்டுமேயொழிய கல்லூரியில் பயிலும் மாணவர்களைக் கொண்டு செய்வது என்பது எவ்விதத்திலும் பொருத்தமற்றதாகும்.

நாள்தோறும் இதுபோன்ற களச் சூழல்கள் தொடக்க நிலை ஆசிரியர்களுக்குத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வரும் சூழலில் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கீழ்க்கண்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார/நகர/மாநகர/ மாவட்டக் கிளைகளின் சார்பில் 30.08.2023 அன்று மாலை தன்னெழுச்சி ஆர்ப்பாட்டங்களை நடத்திடவும்,6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார/ நகர/ மாநகர மற்றும் மாவட்ட கிளைகள் உடனடியாக சுவரொட்டிகள் (Wallposters) வெளியிட்டு அரசின் கவனத்தை ஈர்ப்பது எனவும் இன்று(28.08.2023) நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் காணொளி வழி மாநில மையக் கூட்டத்தில் முடிவாற்றப்பட்டுள்ளது.

மாநில மைய முடிவை செயல்படுத்திட நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய வட்டார,நகர,மாநகர, மாவட்ட,மாநிலப் பொறுப்பாளர்கள் கண்துஞ்சாது கடமையாற்றிடவும், ஆர்ப்பாட்ட நிகழ்வில் தோழமை அமைப்புக்களை இணைத்துக் கொள்ளவும் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

ஆர்ப்பாட்டம் மற்றும் சுவரொட்டியில் இடம்பெற வேண்டிய 6 கோரிக்கைகள் பின்வருமாறு.

(1)தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிடு!*

(2)எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் SCERT இயக்குநரின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெறு!*

(3)தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிடு!*

(4)எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திக்காதே!*

(5) காலை உணவுத் திட்டத்தை 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்து!

(6)காலை உணவுத் திட்டப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர்களையும்,ஆசிரியர்களையும் விடுவித்து அத்திட்டம் சார்ந்த அனைத்துப் பணிகளையும் சத்துணவு ஊழியர்களிடம் வழங்கு!

தோழமையுடன்
ச.மயில்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News