தமிழகத்தில் மாணவர்களின் பொது அறிவு, மொழி அறிவு மேம்பட நாளிதழ் வாசிப்புக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவதுடன், ஊக்கத் தொகை அல்லது உயர் கல்வியில் முன்னுரிமை வழங்கலாம் என தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வியாளர் எஸ்.சிவகுமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: நாளிதழ் வாசிப்பை பள்ளிபருவத்திலிருந்தே மாணவர்களுக்கு பழக்கி விட்டால், அவர்களுக்கு அது உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு பெரும் பயன்தரும்.
கேரளாவைப் போல.. கேரள மாநிலத்தில் 10, பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளிதழ் வாசிப்புக்கு 10 மதிப்பெண்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அம்மாநில கல்வித் துறை அமைச்சர் அண்மையில் அறிவித்தார்.
இதேபோல, இந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தி, தினந்தோறும் நாளிதழை வாசித்து, அதற்கு ஜூன் முதல் மார்ச் வரை மாதந்தோறும் 10 மதிப்பெண்களுக்கு ‘முதல்வர் நாளிதழ் வாசிப்பு திறனறித் தேர்வு’ என்ற பெயரில் தேர்வு வைத்து, மொத்தம் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு உதவித் தொகையோ அல்லது உயர்கல்வியில் முன்னுரிமையோ வழங்கலாம்.
எஸ்.சிவகுமார்
பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் தேவையான நாளிதழ்களை வாங்கினால்தான் அனைத்து மாணவர்களும் படிக்க முடியும். நாளிதழ்களை வாங்க உள்ளூரில் உள்ள சேவை சங்கங்கள், தன்னார்வலர்களின் உதவியை நாடலாம்.
பொது அறிவு மேம்படும்: தற்காலத்தில் அனைத்து வேலைவாய்ப்புகளுமே போட்டித் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படுவதால், பொது அறிவு என்பது மிகவும் அவசியமானது. நாளிதழ்களை வாசிப்பதால், பொது அறிவு மேம்படுவதுடன், மாணவர்கள் ஒழுக்க நெறிகளுடன் வளரும் சூழலும் ஏற்படும்.
பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ள வாசிப்பு இயக்கத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இது அமையும். பள்ளிக் கல்வித்துறை இதற்கான திட்டமிடுதல்களை மேற்கொண்டு, நாளிதழ் வாசிப்பை அன்றாட வழக்கமாக இளம் வயதிலேயே பழக்கப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment