Join THAMIZHKADAL WhatsApp Groups
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு சொத்தை வாங்கியிருந்தாலும் சரி, உங்கள் தந்தை அல்லது தாயார் பெரியல் உள்ள வாரிசு உரிமைப்படி வந்த சொத்தாக இருந்தாலும் சரி, அல்லது உயில் ஆவணத்தின்படியோ அல்லது செட்டில்மெண்ட் பத்திரப்படியோ சொத்து வந்திருந்தாலும் உடனே பட்டா மாற்றம் செய்துவிடுங்கள்.
பட்டா மாற்றம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பட்டா வாங்குவது ஒன்றும் கடினமான வேலை இல்லை. முன்பெல்லாம் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று அலைந்துவாங்க வேண்டும். உங்கள் சொத்து எந்த தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்த பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்மந்தமாக நீங்கள் நேரில் போய் விண்ணப்பிக்க வேண்டும்.
www.tn.gov.in/LA/formsஎன்ற தளத்திற்கு சென்று பட்டா மாற்றம் செய்ய 3 பக்க விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பின்னர் அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்து தருவார்கள்.
சிக்கல் ஏதேனும் இருந்தால் அதனை நமக்கு தெரிவிப்பார்கள். இதற்கு தாசில்தார் அலுவலகம் சென்று வர வேண்டும். இப்போது அப்படியில்லை.. ஆன்லைனிலேயே நீங்கள் உங்கள் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்லாம். உட்பிரிவற்ற பட்டா மாற்றம், உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என இரண்டு விதிமாக ஆன்லைனில் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
பட்டா எவ்வளவு முக்கியானது: கிராமங்களில் பத்திரம் பதிந்துவிட்டு பட்டாவை மாற்றாமல் விட்டுவிடுகிறார்கள். ஆனால் பத்திரம் எவ்வளவு முக்கியமோ, பட்டாவும் அந்தளவிற்கு முக்கியம். பத்திரம் என்பது இவருடைய நிலத்தை இவர் வாங்கி இருக்கிறார் என்பதை குறிக்கும். அதேநேரம் அந்த நிலத்தின் உரிமை இவருக்குத்தான் உள்ளது என்பதை குறித்து வருவாய்துறை வழங்கும் ஆவணம் தான் பட்டா. பட்டா குறிப்பிட்ட காலத்திற்குள் வாங்காமல் விட்டால் பின்னாளில் சிக்கல் வரவும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக நீங்கள் வாங்கியது குடும்ப பாகப்பிரிவினை மூலம் வந்த வீடு அல்லது நிலம் என்றால் கவனமாக இருங்கள். குடும்ப பாகப்பரிவினை சொத்து என்றால் நீங்கள் வாங்குபவரின் சொத்து, அவரது பெயரில் பட்டா கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பட்டா உங்களுக்கு மாற்ற சிக்கல் வரலாம்.
ஏனெனில் பழைய பட்டாவில் பல்வேறு காரணங்களால் குடும்ப ரீதியாக பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்கு முறையான உட்பிரிவு பட்டா வாங்கி இருக்க மாட்டார்கள் . அப்படியான சூழலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் நிலையில்தான் பழைய பட்டா இருக்கும். அதனால் தான் பாகப்பிரிவினை அடிப்படையில் பெறப்பட்ட பட்டா இல்லாத வீடு, மனை உள்ளிட்ட்டவற்றை வாங்குவது சிக்கலாகிறது. ஒரு சொத்து வாங்குகிறீர்கள் என்றால் அவர்பெயரில் பட்டா இருந்தால் எளிதாக உங்கள் பெயருக்கு மாற்ற முடியும்.
சரி, ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி? : பட்டா- பெயர் மாற்றம் அல்லது புதிய பட்டா வாங்குவதற்கு முதலில் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
பின்னர் 'பட்டா மாறுதல் விண்ணப்பிக்க' அதில் (Apply Patta transfer) என உள்ள ஐகான்/லிங்கை க்ளிக் செய்ய வேண்டும். அது https://tamilnilam.tn.gov.in/citizen/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH தளத்திற்கு போக வேண்டும்.
பின்னர் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அந்த எண்ணுக்கு எஸ்எம்ஸ் மூலம் ஓடிபி வரும். அதை கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும். அதில் பயனர் பெயர், பெற்றோர், மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க நீங்கள் தர வேண்டும்.
அதை தொடர்ந்து உங்களுடைய நிலம் அல்லது வீடு எந்த மாவட்டம், வட்டம், கிராமம், சார்பதிவாளர் அலுவலகம், ஆவணம் பதிவு செய்யப்பட்ட தேதி (சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட நாள்), ஆவணப் பதிவு எண், புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை நில விவரங்களாக நீங்கள் வரிசையாக கொடுங்கள்.
அதன் பின்னர் அப்பா அம்மாவிடம் வாங்கிய சொத்து என்றால் தானப்பத்திரம், விற்பனையில் வாங்கிய சொத்து என்றால் கிரையப் பத்திரம், உங்களுக்கு உறவினர்களிம் இருந்து பாகமாக கிடைத்த சொத்து என்றால் பாகப்பிரிவினை பத்திரம் போன்ற ஏதாவது ஒரு சொத்து பத்திரம், விண்ணப்பதாரரின் அடையாள சான்று (ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்), நீங்கள் எங்கு வசிக்கிறீர்களோ அந்த வீட்டில் வசிப்பதற்கான சான்று போன்றவற்றை இணைப்பு விவரங்களில் தர வேண்டும் டாக்குமெண்ட் வடிவில் இதனை ஆன்லைனில் அப்லோட் செய்ய வேண்டும்.
அதன் பின்னர், விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை இணையவழியில் நீங்கள் செலுத்த வேண்டும். கூகுள்பே, போன்பே , பேடி எம் உள்பட யுபிஐ மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம். உட்பிரிவற்ற பட்டா மாற்றம் என்றால் விண்ணப்பக் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும். உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என்றால் அதற்கான தொகையாக ரூ.400 ரூபாயும், அதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.60 சேர்த்து செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்திய பிறகு விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு, பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பித்த தேதியை குறிப்பிட்டு அந்த விண்ணப்பத்தின் எண் உடன் சேர்த்து விண்ணப்பம் பெறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கும்.
அத்துடன் உங்களிடம் பெறப்பட்ட சேவைக் கட்டணம் குறித்த விவரம், பட்டா மாறுதல் மனு தொடர்பாக புல விசாரணைக்கு வருவாய்த் துறை அலுவலர்களால் (கிராம நிர்வாக அலுவலர் / நிலஅளவர்) தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று எஸ்எம்எஸ் வரும். தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இந்த எஸ்எம்எஸ் உங்கள் செல்போனுக்கு வரும்.
அதன் பின்னர் சில நாட்களுக்கு பின்னர் பட்டா விண்ணப்பதாரருக்கு கிடைக்கும். மேலும், விண்ணப்பத்தின் நிலையை https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தளத்திற்கு சென்று விண்ணப்ப எண்ணை கொடுத்து பயனர்கள் அறிந்து கொள்ளலாம். பட்டா 15 நாட்களிலேயே உங்களுக்கு ஆன்லைனில் வந்துவிடும். அதிகபட்சம் 30நாளில் பட்டா ஆன்லைனில் வந்துவிடும்.அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment