Join THAMIZHKADAL WhatsApp Groups
தற்போது மாடுகளிடம் அதிகப் பால் பெறுவதற்காக மருந்துகளை ஊசி மூலம் செலுத்துவதால், பாலை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்கிறார்கள்.
அதனால், காப்பி, தேநீரில் மாட்டுப் பாலுக்குப் பதிலாக தேங்காய்ப் பால் குடிக்கலாமா? புளியை உணவில் முழுவதுமாகத் தவிர்க்கச் சொல்கிறார்கள். மாற்றாக, தக்காளி, எலுமிச்சம் பழம் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாமா? -கோ.ஜானகிரமணி தேங்காயிலுள்ள குணங்களாகிய குளிர்ச்சி, கனம், நெய்ப்பு ஆகியவவை தேங்காய்ப் பாலிலும் பிரதிபலிப்பதால், நீங்கள் குறிப்பிடுவதுபோல காப்பி, தேநீர் தயாரிப்பிற்குப் பயன்படுத்தலாம்.
பாலிலும் தேங்காய்க்கு உள்ள குணங்கள்அனைத்தும் உள்ளன. ஆனால், பாலில் டீ டிகாக்ஷன், காப்பி போன்றவை கலந்தே குடித்துப் பழகிப் போன நம் நாக்குக்குத் தேங்காய்ப் பால் டீ, காப்பியினுடைய ருசியை நாக்கு ரசிக்குமா? என்று தெரியவில்லை. பாலில் மருந்துக் கலப்படம் இருப்பதாகப் பயப்படும் நீங்கள், அரிசியிலும், பருப்பிலும், கறிகாய்களிலும் மருந்து கலப்படமே இல்லை என்று கூற முடியுமா?
எதில்தான் கலப்படமில்லை? அவற்றையெல்லாம் சாப்பிட்டு உயிர் வாழ்கிறோமே? அது எப்படி? ரசாயன உரங்களுக்குத் தகுந்தவாறு மரபணு மாற்றங்களை உடல் செய்வதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.
அவற்றிலுள்ள நச்சுத்தன்மையை அகற்ற தன்னால் முடிந்தவரை கல்லீரல் செய்கிறது. அதையும் மீறி உள்ளே செல்லும் நச்சுத்தன்மையை நுரையீரல் தான் வெளியிடும் கரியமிலவாயுவின் மூலமாகவும், சிறுநீரகங்கள் தம் பங்கிற்கு வடிகட்டி, சிறுநீர் மூலமாகவும் வெளியேற்றுகின்றன. இந்தப் போராட்டத்தின் உச்சகட்டத்தில் பழுதடையும் கல்லீரல், நுரையீரல், சிறுநீகரங்களின் மூலமாக மனிதன் நோய்வாய்ப்படுகிறான். கேன்சர் கட்டிகள், நிணநீர் கிரந்தி வீக்கம், மூளைச் சோர்வு, மனக் குழப்பம் என்றெல்லாம் ஏற்படத் தொடங்குகின்றன.
பாலைக் காய்ச்சும்போது, மிதமான சூட்டில் வைத்து கரண்டியால் கிளறியபடியே இருந்தால், அதிலிருந்து வெளிப்படும் ஆவியின் மூலமாக ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்துகளின் நச்சுத்தன்மை பெரும்பாலும் வெளியேறிவிடும் வாய்ப்புள்ளது. மாறாக, விசில் சத்தம் போட்டு நம்மை அழைக்கும் பால் காய்ச்சும் பாத்திரங்களில் இந்த நச்சு வெளியேறும் வாய்ப்பில்லாததால் அதனால் கேடு விளையும் தன்மை அதிகமுள்ளது. இதே முறையை அரிசி, பருப்பு, கறிகாய்களிலும் பயன்படுத்தினால் நல்லது. ஆனால் விரைவாக சமையலை முடிக்க வேண்டியிருப்பதால் குக்கரும், மூடி போட்ட பாத்திரங்கள்தான் இன்று பயன்பாட்டில் அதிகமுள்ளன.
தங்களுடைய கருத்து வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், நடைமுறையில் தேங்காய்ப் பால் பிழிந்து எடுப்பதைவிட, பாலைக் காய்ச்சுவதே மகளிருக்கு எளிதாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. சிறுவயதில் காய்கறி கடையில் தக்காளி வாங்கும்போது, கடைக்காரர் 'தக்காளியை நசுக்காதே' என்பார். அதனால் தக்காளியை மிக கவனமாக, கறிகாய்க் கூடையின் மேல் வைத்து வீட்டுக்குக் கொண்டு வருவது வழக்கம். இன்று தக்காளி, கூடையின் அடியில் போட்டு, மேலே கறிகாய்களை வைத்து வீட்டுக்குக் கொண்டு வந்தாலும் நசுங்குவதில்லை.
அந்தளவுக்குக் கெட்டியாக உள்ளது. அதனால் தக்காளியிலும் ஒரிஜினல் தன்மையில்லை. புளியைக் கரைத்துச் சாம்பார், ரசம் என்று தயாரிப்பதில் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. அமிலச் சுரப்பு மேம்படுகிறது.
மூடாத பாத்திரத்தில் வேக வைக்கப்படும் புளித்தண்ணீரால் கேடு ஏதும் வராது. சமையலுக்குப் பழைய புளி கருப்புப் புளியே சிறந்தது. புளிக்கு மாற்றாக, தக்காளி, எலுமிச்சையை நிகராகக் கொள்ள முடியாது. புளியிலுள்ள பல மருத்துவக் குணங்கள், தக்காளி, எலுமிச்சம் பழம் மூலம் நம்மால் பெற இயலாது.
No comments:
Post a Comment