அரசுப் பள்ளிகளில் படிக்கும் எளிய வீட்டுப் பிள்ளைகள் சுயமாக வாசிக்கத் (Independent Reading) தொடங்கப்பட்டது வாசிப்பு இயக்கம்.
அதன் பொருட்டு அவர்கள் கைகளில் சின்னஞ்சிறு புத்தகங்களை - எளிய மொழியில் - படங்களுடன் தருவது வாசிப்பு இயக்கத்தின் அடிப்படை நோக்கம்.
பழைய சுமைக்கு இடமில்லை: குழந்தைகள் புத்தகங்களை விரும்பிக் கையில் எடுப்பதற்கான ஏற்பாடு இது. இந்த விருப்பம் பாடப்புத்தகம் வரை பரவி விரிய வேண்டும் என்பதும் வாசிப்பு இயக்கத்தின் எதிர்பார்ப்பு. எந்தப் புதிய முயற்சியின் மீதும் பழைய நிழல்கள் வந்து வந்து விழுகின்றன. புரிதல்தான் முதல் தேவை.
புரிதலற்ற தடுமாற்றம் பயணத்தின் வேகத்தைக் குறைக்கிறது. சில நேரங்களில் பயணத்தைப் பாதியில் நிறுத்துகிறது. ஆபத்தான பழைய நிழல் எது? குழந்தைகளைக் 'காலிப் பாத்திரங்க'ளாகப் பார்க்கும் பார்வைதான் பழைய நிழல். பெரியவர்கள் விரும்பியதை எல்லாம் அதற்குள் போடலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் பொருத்தமான வாய்ப்பு தேவை. அதைத் தருவது பெரியவர்களுக்குக் கடினம். உபதேசம் வழங்குவது எளிது. ஆனால், உபதேசத்துக்கான இடமல்ல வாசிப்பு இயக்கம்.
இன்னொரு நிழலும் இருக்கிறது. அது படைப்பாளிகளின் நிழல். இது வாசிப்பு இலக்கியம். புத்தம் புதுசு. படைப்பாளிகள் தாங்கள் சுமந்துகொண்டிருக்கும் மொழியையும் சிந்தனையையும் இறக்கி வைப்பதற்கான இடமல்ல வாசிப்பு இயக்கப் புத்தகம். இங்கு, குழந்தைகள் முக்கியம்; குழந்தைகள் வாசிப்பது முக்கியம். நீங்களும் உங்கள் சுமையும் முக்கியம் இல்லை.
வாசிப்பு மொழி: 1990களின் தொடக்கத்தில், அறிவொளி இயக்கம் கண்டுபிடித்தவை பல. அவற்றில் ஒன்று-வாசிப்பு மொழி. விருதுநகர் மாவட்ட அறிவொளி 'வாசல்' என்ற பெயரில் கற்போர் பத்திரிகை வெளியிட்டது. அதில், 'நம்ம நாடு' என்ற தலைப்பில் ஒருமுறை செய்தி வெளியானபோது, கற்போர் வாசிக்கச் சிரமப்பட்டனர். 'நம் நாடு' என்று எழுதினால் வாசிப்பது எளிது என்றார்கள் அறிவொளித் தொண்டர்கள்.
அதே போல், 'வாருங்கள்' என்று எழுதியபோது வாசிக்கத் திணறினார்கள். 'வாங்க' என்பதைச் சுலபமாக வாசித்தார்கள். பேச்சு மொழி, எழுத்து மொழியைத் தாண்டி, இது - வாசிப்பு மொழி. சின்னஞ்சிறு வாக்கியம், சற்று வேடிக்கையான உள்ளடக்கம், தெரிந்த எளிமையான சொற்கள், கதையின் அடிப்படையான சில சொற்கள் மீண்டும் மீண்டும் வருதல், நிறைய படங்கள் - வாசிப்பை நோக்கிக் குழந்தைகளை ஈர்ப்பவை இவை. இந்தப் புரிதல் வாசிப்பு இயக்கத்தின் அடிப்படை.
53 புத்தகங்கள்: வாசிப்பு இயக்கத்தின் முதல் கட்டமாக, 53 சின்னஞ்சிறு புத்தகங்களைத் தமிழ்நாடு அரசு அச்சிட்டு, முன்னோட்ட ஆய்வுக்கு (Pilot Study) சில பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது முதல் அடி; ஆனாலும் முக்கியமான அடியெடுப்பு.
புத்தகங்களைத் தந்தவர்கள் பலர். உதயசங்கர், சாலை செல்வம், அ.வெண்ணிலா, முருகேஷ், கொ.மா.கோ.இளங்கோ, கலையரசி எனப் படைப்பாளிகள் பலரின் பெயர்கள் கண்ணில் படுகின்றன. இரண்டு முறை துணைவேந்தராக இருந்தவரும், அரசு நிறுவிய பல்வேறு ஆணையங்களின் தலைவராகப் பொறுப்பு வகித்தவரும், இன்று 83 வயதை எட்டியவருமான வே.வசந்திதேவியும் ('குழந்தையின் சிரிப்பு') வாசிப்பு இயக்கப் படைப்பாளிகளில் ஒருவர். மறுபுறம், ஒன்பதாம் வகுப்பு மாணவியான ரமணியும் ('பூக்களின் நகரம்') படைப்பாளிகளில் ஒருவர்.
குழந்தைகளின் வாசிப்பு வேகத்தையொட்டி, 'நுழை', 'நட', 'ஓடு', 'பற' என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் புத்தகங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. இவை விதிகள் அல்ல. நெகிழ்வான பகுப்பு முறைகள்... அவ்வளவுதான். யாரும் எந்தப் புத்தகத்தையும் கையில் எடுத்து வாசிக்கலாம். குழந்தைகளின் வாசிப்போடு கூடவரும் ஆசிரியர் அல்லது தன்னார்வலர் தரும் ஊக்கத்தைப் பொறுத்தது அது.
திருப்தி அடைந்தால் பயணம் நின்றுவிடும். அடுத்த எட்டில் வர வேண்டிய புத்தகம் எப்படி இருக்க வேண்டும்? மொழி இன்னும் எளிமைப்பட வேண்டும்; பறவை, விலங்கு, செடி கொடி மரம், ஆறு, மலை, வானம் சார்ந்த உள்ளடக்கம் - குறிப்பாக, இயற்கை சார்ந்த உள்ளடக்கம் - இன்னும் வலுப்பெற வேண்டும் என்பவை அடுத்த எட்டுக்கான உரையாடல்களில் தெறித்த நேர்மையான சிந்தனைகள்.
களத்தின் காட்சிகள்: திட்டம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் களம். திட்டம் பிரகாசிப்பது - களத்தின் வெற்றியால்தான். வகுப்பறைகளும் பிள்ளைகளும்தான் இங்கு களம். 'நான் வாசித்துவிட்டேன்!', 'நானாக வாசித்துவிட்டேன்!' என்று இன்று வகுப்பறைகளில் ஒலிக்கும் குழந்தைகளின் குரல்கள் களத்தின் வெற்றி அடையாளங்கள். 'பகல் கனவு' நூலில், 'பசித்த வேங்கைகள் போல் பள்ளிக் குழந்தைகள் (கதைப்) புத்தகங்களின் மீது பாய்ந்தனர்' எனக் கல்வியாளர் கிஜுபாய் பதேகா எழுதுவார். அந்தக் காட்சி உண்மைதான். வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் மீது பசித்த புலிகளாய்ப் பிள்ளைகள் பாய்வதை, இன்று வகுப்புக்கு வகுப்பு பார்க்க முடிகிறது. பிரிந்தவர் ஒன்று கூடுவது போன்ற காட்சி அது.
புத்தகத்தைக் கையில் எடுத்ததும் உடனடியாகப் பிள்ளைகள் வாசிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். 'வாசி' என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை. '4 புத்தகம் படித்துவிட்டேன்... 7 புத்தகம் படித்துவிட்டேன்' என்று பிள்ளைகள் சிலர் உற்சாகக் குரல் எழுப்பும்போது வகுப்பறையில் இதுவரை தோன்றாத புது மலர்ச்சி!
மறுபுறம் - சரியாகப் பேச்சு வராத மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் புத்தகங்களை வாரி மார்போடு அணைத்துக் கொள்கின்றனர். தட்டுத் தடுமாறி வார்த்தைகளை வாசிக்கின்றனர். வாசித்துவிட்டுப் பூவாய்ச் சிரிக்கின்றனர். நம் கண்கள் நனைகின்றன. ஒரு பக்கம் கம்பீரம். இன்னொரு பக்கம் கனிவு. அதுதான் வாசிப்பு இயக்கக் களம்.
திறந்த கதவுகள்: பயணத்தின் நோக்கம் - கதவுகளைத் திறப்பதுதான். திறந்த கதவுகளுக்குள் புதிய ஒளியைக் காண்பதுதான். பார்வைக்கும் வெளிச்சத்துக்கும் வராத - அங்கீகாரம் இல்லாமல் விடுபட்டுப்போன எண்ணற்ற திறமைகளைக் கண்டுபிடித்துக் கைகோத்திருக்கிறது வாசிப்பு இயக்கம்.
வாசிக்கும் குழந்தைகளை விதம்விதமாய் உற்சாகப்படுத்தும் தன்னார்வலர்கள் ஒரு பக்கம்; புத்தகங்களை வாசித்ததும் தாங்களே ஒரு கதை சொல்ல முன்வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் இன்னொரு பக்கம். வாசிப்பு இயக்கம் கண்டுபிடித்த நட்சத்திரங்கள் இவை. 'ஒவ்வொருவர் சொல்லவும் ஒரு வரலாறு இருக்கிறது; ஒரு கதை இருக்கிறது' என்கிறது வாசிப்பு இயக்கம்.
வாசிப்பு இயக்கம் திறந்துவிட்ட இன்னொரு கதவு - பெண் கல்வி வாசிப்பு மையம். எழுத்தறிவு இயக்கங்கள்வழி எழுதவும் படிக்கவும் சொற்பமாய்க் கற்றவர்கள் - அரைகுறையாகப் படித்துப் பள்ளிப் படிப்பை நிறுத்தியவர்கள் - குறிப்பாகப் பெண்கள் - சின்னஞ்சிறு புத்தகங்களைக் கையிலெடுத்துத் தொடர்ந்து வாசிக்கப் 'பெண் கல்வி வாசிப்பு மையங்க'ளையும் அங்கு வாசிப்பதற்கான புத்தகங்களையும் அரசு உருவாக்க வேண்டும் என்ற குரல் இன்று வலுப்பட்டு வரக் காரணமானது - பள்ளிப் பிள்ளைகளின் வாசிப்பு இயக்கமே!
'எனக்கொரு கனவு இருக்கிறது' எனத் தொடங்கி, மார்ட்டின் லூதர் கிங் 1963இல் நிகழ்த்திய உரை மறக்க முடியாதது. நமக்கும் ஒரு கனவு இருக்கிறது. எளிய வீட்டுக் குழந்தைகளின் கைகளில் அவர்கள் வாசிக்கச் சின்னஞ்சிறு புத்தகங்களைத் தருவதோடு, அவர்களின் உழைப்பாளிப் பெற்றோர் கைகளிலும் புத்தகங்களைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு!
No comments:
Post a Comment