Join THAMIZHKADAL WhatsApp Groups
நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் சிலர், அதே பள்ளி மாணவர் மீதும் அவர் சகோதரி மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது சமூகத்தில் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. மாணவர்களிடம் மிக வேகமாகப் பரவிவரும் மது மற்றும் இதர போதைப் பழக்கங்கள், வகுப்பறையிலும் பள்ளிக்கு வெளியிலும் மாணவர்களின் விரும்பத்தகாத நடவடிக்கைகள் போன்றவற்றைக் குறித்தெல்லாம், இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் பேசுவதும், பின்னர் வழக்கம்போல அடுத்த சம்பவம் நடக்கும்வரை அவற்றையெல்லாம் மறந்துவிட்டு இருப்பதும் நம் சமூகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்துக்குமான ஒற்றைக் காரணம் என்று கொரோனாவைக் கைகாட்டிக் கடந்து சென்றுவிடுகிறோம்.
மாணவர்களிடம் நிகழ்ந்துவரும் இந்த மாற்றங்களுக்கு என்னவெல்லாம் பின்னணிக் காரணங்களாக இருக்கின்றன? மாணவர்கள் ஏன் அழிவுப் பாதையில் செல்கிறார்கள்? ஆசிரியர்களால் அவர்களை நல்வழிப்படுத்த முடியாதா?
முடியும். கண்டிப்பாக ஆசிரியர்களால் நல்வழிப்படுத்த முடியும். அவர்களை ஆசிரியர் பணியை மட்டும் செய்யச் சொன்னால், மாணவர்கள் செய்யும் குற்றங்கள் ஓரளவு குறையும். முன்பெல்லாம் ஆசிரியர்களுக்கு, பாடங்களைச் சொல்லிக்கொடுப்பது மட்டுமே வேலையாக இருந்தது. அதனால் அவர்களுக்கு மாணவர்களோடு செலவிட நிறைய நேரம் கிடைத்தது. ஆசிரியர்களால் மாணவர்களுடன் உரையாட முடிந்தது. அவர்களின் நிறை குறைகளை, பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால் தற்போதைய கல்விச்சூழலில், கற்பித்தல் பணி மட்டுமல்லாமல், மேற்கொண்டு பல்வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. அலுவலர்கள் செய்யவேண்டிய வேலைகள் எல்லாம் ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகின்றன. அதனால் அவர்களுக்குப் பாடப் புத்தகத்தில் இருக்கும் பாடங்களைச் சொல்லித்தரவே நேரம் போதவில்லை. பிறகு எப்படி அவர்கள் மாணவர்களோடு உரையாடி, அவர்களின் நிறை குறைகளைச் சரி செய்ய முடியும்?
ஒரு புரிதலுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகள், பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் பட்டியல், சுமத்தப்படும் கூடுதல் சுமைகள் ஆகியவை இங்கே தரப்பட்டுள்ளன.
மன்றங்கள்
1) தமிழ் மன்றம்
2) ஆங்கில மன்றம்
3) கணித மன்றம்
4) அறிவியல் மன்றம்
5) தொன்மை மன்றம் (சமூக அறிவியல்)
6) திரைப்படம் காட்சிப்படுத்துதல் மன்றம்
7) தமிழ் இலக்கிய மன்றம்
8) ஆங்கில இலக்கிய மன்றம்
9) வினாடி வினா மன்றம்
10) வானவில் மன்றம்
11) குழந்தைகள் பாதுகாப்பு மன்றம்
12) போக்சோ மன்றம்
13) போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றம்
14) சாலைப் பாதுகாப்பு மன்றம்
15) தேர்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம்
16) சுற்றுச்சூழல் மன்றம்
17) நூலக மன்றம்
18) முன்னாள் மாணவர்கள் மன்றம்
19) JRC
20) SCOUT
21) NSS
22) NCC
நலத்திட்டப் பதிவேடுகள்
1) பாடப்புத்தகங்கள்
2) பாடக்குறிப்பேடுகள்
3) புத்தகப் பை
4) காலணிகள்
5) அட்லஸ்
6) சத்துணவு சாப்பிடும் மாணவர்கள்
7) இலவசச் சீருடை விவரங்கள்
8) Sanitary Napkin for Girl Students Details
9) Geometry Box
10) இலவச சைக்கிள்
11) மடிக்கணினி
கூடுதல் வேலைகள்
1) Student Admission – Register
2) Student Transfer Certificate – Register
3) Potential Dropout Details
4) OOSC Details
5) X, XII STD – Nominal Roll
6) Health & wellbeing ( Students Height, Weight, Eye Power issues, …etc – 48 questions)
7) School Timetable
8) இல்லம் தேடிக் கல்வி
9) நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பிள்ளை
10) புதுமைப் பெண்
11) 7.5% இட ஒதுக்கீடு
12) பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம், பதிவேடு பராமரித்தல்
13) எண்ணும் எழுத்தும்
14) மாணவர்களின் பேருந்துப் பயண அட்டை
15) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு
16) மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல்
17) RBSK & IEDSS
18) பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டப் பதிவேடு
கல்வி உதவித்தொகைப் பணிகள்
1) Pre Matric SC/ST Scholarship
2) Post Matric SC/ST Scholarship
3) Minority Scholarship
4) பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை
5) சுகாதாரத்துறை பெற்றோரின் மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை
6) MBC Scholarship
இதர பணிகள்
1) SSLC / HSC (+1, +2) Exam Duty
2) Online Entry NR for 10th Students
3) Supplementary Exam (June, September)
4) NMMS (VIII STD) Exam
5) NTSE (X STD) Exam
6) ஊரகத் திறனாய்வுத் தேர்வு
7) ESLC (VIII STD) Exam
8) TNPSC Exam
9) Election Duty
10) BLO Duty
11) மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
12) Stock Register Maintain Duty
13) Treasury / Pay Bill work
14) TRI certificate
15) Acutance Register for Regular Teachers / Part Time Teachers / Non-Teaching Staff
16) Sports competitions
17) Over all Competitions
18) கலைத் திருவிழா
19) CRC & BRC Training / RP Training
இன்னும் இதுபோலப் பல வேலைகளை ஆசிரியர்களுக்கு ஒதுக்குவதால், அவர்களின் கற்பித்தல் பணி பெருமளவில் பாதிக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனும் பாதிக்கப்படுகிறது.
இவையெல்லாம் தேவையான – அவசியமான செயல்களாக இருந்தாலும், இந்தப் பணிகளுக்கென ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்களை – பணியாளர்களை நியமித்து அவர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கு பாடத்திட்டங்களை நடத்துவதற்கு நேரம் போதாத காரணத்தால், அவர்களால் நலத்திட்டச் செயல்பாடுகளிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை நிலவுகிறது. இதுபோன்ற இரட்டைக்குதிரைச் சவாரி நிலையால் பெரும்பாலான திட்டங்கள் பெயரளவிலேயே இருக்கின்றன. நல்ல திட்டங்கள்கூட ஏட்டளவில் நின்றுவிடுகின்றனவே தவிர, செயல்பாட்டில் இல்லை என்பது வேதனைக்குரியது.
இதற்கிடையில், மாணவர்களை மதிப்பெண்கள் பெறும் இயந்திரமாக மாற்றும் சூழலும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏன் உங்கள் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது, ஏன் மாணவர்களின் மதிப்பெண் குறைந்துள்ளது போன்ற உயரதிகாரிகளின் கேள்விகளால் ஆசிரியர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. அந்த அழுத்தமானது ஒரு மாணவனை எப்படியாவது 35 மதிப்பெண் எடுக்கவைத்து, தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்பட வைக்கிறதே தவிர, அந்த மாணவன் பாடத்தைப் புரிந்துகொண்டாரா? என்பதில் கவனம் செலுத்த முடிவதில்லை.
வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்பதை ஆசிரியர்கள் முழுமனதோடு ஏற்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டிக்கக்கூட ஆசிரியர்களுக்குத் தற்போது உரிமை இல்லை என்பதே உண்மை. கண்டிக்கும் ஆசிரியர்களை மாணவர்களே தாக்குவது, பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்குவது, மாணவர்கள் உடனுக்குடன் உணர்வுவயப்பட்டு விபரீத முடிவுகளை எடுப்பதால் நேரிடும் பேரிழப்பு மற்றும் அதன் பின்விளைவுகள் என்று, ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு இல்லாத சூழலும் சேர்ந்தே நிலவுகிறது.
இத்தனை அழுத்தங்களுக்கு இடையில்தான் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி என்பது வெறும் பாடங்களை மட்டும் கற்பித்து, மாணவர்களை வேலை செய்யும் இயந்திரங்களாக உருவாக்கும் செயல்பாடு அல்ல. நல்லவை, அல்லவை, சமூக அக்கறை, தன்னம்பிக்கை, சவால்களை எதிர்கொள்ளும் துணிவு உள்ளிட்ட ஏராளமான வாழ்வியல் கூறுகளை இளைய தலைமுறைக்குக் கடத்தவேண்டிய இடங்களே பள்ளிக்கூடங்கள். ஆனால், தற்கால பொருளாதாரமய வாழ்க்கைச்சூழலில், மாணவர்களை வெறுமனே மதிப்பெண் அடிப்படையில் வகைப்படுத்தி அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வேலையை, தனியார் பள்ளிகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் நமது கல்வித்துறை செயல்படுத்தி வருவது வேதனைக்குரியது.
தெருக்கள்தோறும் திறந்து வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள், மதுப் பழக்கத்துக்கு ஆளான பெற்றோர் மற்றும் சுற்றத்தார், குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான இடைவெளி, மாஸ் ஹீரோ மன நிலையை விதைக்கும் திரைப்படங்கள், உள்ளங்கையில் தவழும் சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் என மாணவர்களின் கவனம் மற்றும் நடத்தைச் சிதைவுகளுக்கு ஏராளமான காரணிகள் இருந்தாலும் அவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு வெறும் ஆவண எழுத்தாளர்களாகவும் பதிவேடு பாராமரிப்பாளர்களாகவும் மட்டுமே ஆசிரியர்களை மாற்றி வைத்துள்ளது இன்றைய கல்வித்துறை.
கொரோனா இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் நியமனம் தேவை என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தன. வழக்கம்போலவே அந்தக் கோரிக்கை அரசின் கவனம் பெறாமல் போக, ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கேட்டுக்கேட்டு ஓய்ந்துபோனதால் தற்போது அவர்களும் அந்தக் கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டனர்.
முன்பெல்லாம் நீதிபோதனை என்று ஒரு வகுப்பு இருந்தது. அந்த வகுப்பில் மாணவர்களுக்கு நீதிக் கருத்துகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. தற்போது அந்த வகுப்புகள் இல்லை. திருக்குறளில் இல்லாத நீதி போதனைகள் இல்லை. ஆனால் தற்போதைய கல்விமுறை ஒவ்வொரு திருக்குறளுக்கும் முழுமையான விளக்கத்தைக்கூடச் சொல்லித்தருவதில்லை. ஒரு குறளுக்கு இரண்டு வரிகளில் விளக்கம் கொடுக்கப்பதோடு முடிந்துவிடுகிறது. அந்த விளக்கத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மாணவர்களுக்குப் பொருள் தெரிவதில்லை. பெரும்பாலான ஆசிரியர்களும் தங்களின் வேலைப்பளுவால் விரிவான விளக்கத்தைச் சொல்லித் தருவதில்லை.
மொத்தத்தில் இளைய தலைமுறையோடு உரையாட பெற்றோர்களுக்கும் நேரம் இருப்பதில்லை. ஆசிரியர்களுக்கும் நேரம் தரப்படுவதில்லை. இதனால், சமூகத்திலும் இணையத்திலும் தாங்கள் காணும் நிகழ்வுகளின் தாக்கத்தில் எதிர்காலத் தூண்கள் துருப்பிடித்துச் சிதைந்துகொண்டுள்ளன.
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, கல்வி முறையில் உரிய மாற்றங்களைக் கொண்டுவந்து சீர்திருத்தவில்லை என்றால் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்.
பழ. கௌதமன்
மாநிலத் தலைவர்
ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்
No comments:
Post a Comment