மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கிராமப்புற மேம்பாட்டுப் பணிகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. அந்த வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளின் கண்காணிப்பு, ஆய்வு, மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் இயற்கை வள மேலாண்மை, நீா்வளம்-விவசாயம் சாா்ந்த பணிகளை கண்காணிப்பது மட்டுமன்றி பிரத்யேக ஆய்வுகளுக்கும், தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைக்கும் ட்ரோன்களை பயன்படுத்த முன்மொழியப்படுகிறது. ட்ரோன் பயன்பாட்டுக்கான செலவினத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படாது. இத்திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் 10 சதவீத நிா்வாக செலவின நிதியை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ட்ரோன் கண்காணிப்பு நடவடிக்கை, குறைதீா் அதிகாரிகளுக்கு பெரிதும் உதவும்.
இதன் மூலம் புகாா்களுக்கு குறித்த நேரத்தில் தீா்வு காண முடியும். எனவே, குறைதீா் அதிகாரிகளுக்கு ட்ரோன் வசதியை அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ட்ரோன் கண்காணிப்பு வரம்பு குறித்து மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களே முடிவு செய்துகொள்ளலாம். ட்ரோன் மூலம் எடுக்கப்படும் அனைத்து விடியோக்களும் திட்ட இணையதளத்தில் பகிரப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தில்லி செங்கோட்டையில் கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தின உரையாற்றிய பிரதமா் மோடி, கிராமப் புற மேம்பாட்டில் அறிவியல்-தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்தினாா். மேலும், ட்ரோன் இயக்கம் மற்றும் பழுதுபாா்த்தல் குறித்து 15,000 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சியும் கடனுதவியும் அளிக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவா் வெளியிட்டாா்.
No comments:
Post a Comment