Join THAMIZHKADAL WhatsApp Groups
மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும். ஓரிரு மாதத்தில் மாதத்திற்கு இரு கிருத்திகை நட்சத்திரம் வரும்.
அன்றைய தினம் அனைத்து கோவில்களிலும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பெரும்பான்மையோர் விரதமிருந்து அவரவர் இல்லத்தில் கிருத்திகை வழிபாடு நடக்கும்.
இவ்வாறு மாதந்தோறும் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் வருடத்திற்கு மூன்று கிருத்திகை தினத்தில் விரதமிருந்து வழிபாடு செய்வர். இப்படி மூன்று கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகனை வணங்குபவர்களுக்கு, வருடத்தின் அனைத்து கிருத்திகைகளிலும் விரதமிருந்து வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அந்த வகையில், ஆடி மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்தான் இந்த ஆடி கிருத்திகை. பொதுவாகவே கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. அதிலும் ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்தால், நமக்கு இருக்கும் தோஷங்கள் கூட நிவர்த்தி ஆகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க இந்த ஆடி கிருத்திகையை யாரெல்லாம் அவசியம் இருக்க வேண்டும்? கிருத்திகை விரதத்தை எப்படி கடைபிடிப்பது? என்பதைப் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சிவபெருமானின் அருளால் தோன்றியவர் முருகன். ஆறு கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார் முருகப்பெருமான். அந்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் "கார்த்திகை" நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமான் வழிபடப்படும் வழக்கம் ஏற்பட்டது. வருடத்தில் தை கிருத்திகை, ஆடி கிருத்திகை என்ற இரு கிருத்திகைகள் சிறப்பானதாகும்.
இந்த ஆடி கிருத்திகை தினத்தன்று, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இப்படிப்பட்ட பாடல்களை ஒலிக்கச் செய்து உங்களது காதுகளில் கேட்பது புண்ணியத்தை தேடித்தரும். நீங்கள் குறிப்பாக திருமணமாகாதவர்களாக இருந்தால், திருப்புகழில் சொல்லப்பட்டிருக்கும் இந்த பாடலை முருகப் பெருமானை நினைத்து, மனமுருகி ஒரே ஒரு முறையாவது உங்களது வாயால் உச்சரிக்க வேண்டும். அப்படி செய்தால் அடுத்த கார்த்திகைக்குள் கண்டிப்பாக திருமணம் நடைப்பெறும் என்பது நம்பிக்கை.
இந்த ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை வேளையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும்.
முடிந்தவர்கள் இந்த தினம் முழுவதும் உணவேதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது சிறந்தது. சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மாலையில் உங்களுக்கு அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் தீராத கஷ்டங்கள் தீர்ந்து நல்வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment