Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு பள்ளி தற்காலிக சுகாதாரப் பணியாளர்களுக்கு 10 மாதங்களாக ஊதியம் வழங்காததால் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தற்காலிக சுகாதார பணியாளர்கள் நியமிக் கப்பட்டனர். அவர்களுக்கான ஊதியம், சுகாதாரப் பணிகளுக்கான பொருட்கள் வாங்க மாதந்தோறும் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.1,300, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படுகிறது. ஆனால் இந்த நிதி கடந்த 10 மாதங்களாக வழங்கப்படவில்லை.
இதனால் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தை சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கி வருகின்றனர். சில பள்ளிகளில் ஊதியம் கிடைக்காததால் சுகாதாரப் பணியாளர்கள் பணிக்கு வருவதில்லை. இதனால் ஆசிரியர்களே கழிப்பறைகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
சுகாதாரமின்றி கழிப்பறைகள்: சில பள்ளிகளில் சுத்தப்படுத்தாமல் கழிப்பறைகள் சுகா தாரமின்றி காணப்படுகின்றன. இதனால் அவற்றை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் அன்பரசு பிரபாகர் கூறியதாவது: கழிப்பறை சுகாதாரப் பணிகளுக்கு ஏற்கெனவே அரசு ஒதுக்கும் நிதி குறைவாக உள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் ஏற்படும் கூடுதல் செலவை ஆசிரியர்களே ஏற்கின்றனர்.
நிரந்தர பணியாளர்களை...: தற்போது ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த நிதியையும் வழங்கவில்லை. இதனால் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும், சுகாதாரப் பணிகளுக்கான பொருட்களை வாங்கவும் முடியவில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நிரந்தர தூய்மைப் பணியாளர்களை பள்ளிகளுக்கு நியமிக்க வேண்டும்.
அதுவரை ஊராட்சிகளில் உள்ள சுகாதார பணியாளர்களை மாற்றுப் பணி மூலம் பள்ளிகளுக்கு நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment