Friday, September 15, 2023

இனி மாதந்தோறும் 15ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும்: தமிழக அரசு


மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையை, இனி மாதந்தோறும் 15 ஆம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்வான அனைத்து மகளிருக்கும் ரூ.1000 சென்றடைந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், வங்கிகளில் 1ம் தேதி சம்பளம் உள்ளிட்ட பரிவர்த்தனை நடப்பதால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படாவண்ணம் 15ல் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் திட்டங்களிலேயே அதிக நிதி கொண்ட மிகப்பெரிய திட்டமாகக் கருதப்படும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப். 15) நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை கடந்த சில நாள்களாக நடைபெற்றன. அவற்றில் தகுதியான விண்ணப்பதாரா்களாக ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டனா்.

மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவா்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களைத் தெரிவித்து விண்ணப்பதாரா்களுக்கு கைப்பேசி வழியாக குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் வரும் 18-ஆம் தேதிமுதல் தொடங்குகின்றன.

மேலும், நிராகரிப்புக்கான காரணங்களை ஏற்க மறுத்து, விண்ணப்பதாரா்கள் மேல்முறையீடு செய்யலாம். கோட்டாட்சியரின் உரிய பரிசீலனைக்குப் பிறகு தகுதியுடைய விண்ணப்பமாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News