Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 4, 2023

பொறியியல் கல்லூரிகளில் 3-ல் 1 பங்கு இடங்கள் காலி! 11 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் மொத்தமுள்ள இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் காலியாக உள்ளன. அதிலும் 11 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1,60,780 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணையவழியில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் உள்பட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து பொதுப் பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 28 முதல் ஆக. 6-ஆம் தேதி வரையிலும் 2-ஆவது சுற்று கலந்தாய்வு ஆக. 9-இல் தொடங்கி ஆக.22 ஆம் தேதி வரையிலும் 3-ஆவது சுற்று கலந்தாய்வு ஆக.22 தொடங்கி செப். 3-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தமுள்ள 1,60,780 இடங்களில் 54,676 இடங்கள் காலியாக உள்ளன. மூன்று சுற்று கலந்தாய்வுக்கு பிறகு 95,046 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு எண்ணிக்கை 84,812 பேர். கடந்த ஆண்டு 12 கல்லூரிகளில் உள்ள இடங்கள் முழுமையாக நிரம்பிய நிலையில் இந்தாண்டு 16 கல்லூரிகளில் இடங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. இந்த 16 கல்லூரிகளில் 12 அரசுக் கல்லூரிகள். அதே நேரத்தில் இந்தாண்டு 11 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. கடந்த ஆண்டு இது 14 கல்லூரிகளாக இருந்தது. இந்த தரவுகளை மேற்கோள்காட்டி, பொறியியல் படிப்பில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக கல்வி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நடப்பாண்டு தரவுகளின்படி, 68 கல்லூரிகளில் 95% இடங்கள் நிரம்பியுள்ளன. 104 கல்லூரிகளில் 90%, 186 கல்லூரிகளில் 80%, 263 கல்லூரிகளில் 50% இடங்கள் நிரம்பியுள்ளன. 63 கல்லூரிகளில் 10% க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. 37 கல்லூரிகளில் 10 இடங்கள் கூட நிரம்பவில்லை. திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 3 கிளை கல்லூரிகளில் (அரசு கல்லூரிகள்) 50% இடங்கள் கூட நிரம்பவில்லை என்பது கூடுதல் தகவல். அரசின் தரவுகளின்படி, மாநிலம் முழுவதும் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை 2,19,346. இதில், 1,60,780 இடங்கள் ஒற்றைச் சாளர (single window) கலந்தாய்வுக்கு ஒதுக்கப்பட்டன. இதில் 1,48,721 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 12,059 இடங்கள், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் உள்ளன. பொதுப்பிரிவினருக்கு மொத்தமுள்ள 95,046 இடங்களில் 80,951 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்து ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். 7.5% இடஒதுக்கீட்டின்படி, கடந்த ஆண்டு 8,263 பேர் சேர்ந்த நிலையில் இந்தாண்டு 11,058 பேர் சேர்ந்துள்ளனர்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment