சொத்துக்கள் ஒப்படைப்பு தொடர்பான குழப்பங்களால், பிறஅரசுத்துறை பள்ளிகளை, கல்வித் துறையுடன் இணைக்கும் திட்டம் தாமதமாகியுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியின் கீழ், 13,000 தனியார் பள்ளிகள் உட்பட, 58,000 பள்ளிகள் செயல்படுகின்றன.
கூடுதல் நிதி
இவை தவிர, சமூக நலத்துறை, வனத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை போன்றவற்றின் கீழும், 3,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன.
இந்தப் பள்ளிகள் தனித்தனி நிர்வாகமாக உள்ளதால், அரசுக்கு கூடுதல் செலவும், நிர்வாக ஒருங்கிணைப்பும் இல்லாத நிலை உள்ளது.
இதை மாற்ற, பிற துறை பள்ளிகளும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதற்காக, தமிழக பட்ஜெட்டிலும் கூடுதலாக, 5,000 கோடி ரூபாய் நிதி மதிப்பிடப்பட்டது. ஆனால், அரசின் அறிவிப்பு வெளியாகி, நான்கு மாதங்கள் தாண்டி விட்ட நிலையில், இணைப்பு பணிகளை துவங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
பிற துறை பள்ளிகளை ஒரே நிர்வாகத்தில், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இணைக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நடைமுறை சிக்கல்
இதில், ஒவ்வொரு துறை பள்ளியும், அந்தந்த துறையின் சொத்துக்களாக உள்ளன. அந்த பள்ளிகளுக்காக ஆசிரியர்கள், பணியாளர்கள் தனியாக பணியாற்றுகின்றனர். இவர்களை நிர்வாக ரீதியாக பள்ளிக் கல்வியில் கொண்டு வருவதற்கு, வழிகாட்டு முறைகள் தயாரிக்கப்படுகின்றன.
அதேநேரம், பிற துறை பள்ளிகளை அதன் சொத்துக்களாக, பள்ளிக்கல்விக்கு உரிமை மாற்றுவதா அல்லது நிர்வாகத்தை மட்டும் கவனிப்பதா என்பதில், சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து, சட்டரீதியான ஆலோசனை நடத்திய பின், பள்ளிகள்ஒரே நிர்வாகத்தில் இணைக்கப்படும்.
No comments:
Post a Comment